காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்க உள்ள நிலையில் டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து காங்கிரசின் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.
இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள மல்லிகார்ஜுன கார்கே அக்டோபர் 26ம் தேதி பொறுப்பேற்பார் என காங்கிரஸ் எம்.பி. ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். இதையடுத்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மல்லிகார்ஜூன கார்கே மலர்தூவி மரியாதை செலுத்தினார்.








