மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம் – வைகோ நடவடிக்கை!

மதிமுக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக அந்த கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்..

மதிமுக துணை பொதுச் செயலாளராக இருப்பாவர் மல்லை சத்யா ஆவார். இவர் மதிமுக மற்றும் வைகோவுடன் நீண்டகாலமாக பயணித்து வருகிறார்.

இந்த நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால் கட்சியின் பொதுசெயலாளர் வைகோ இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், விடுதலை புலிகள்  தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல், மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக வைகோ குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த மல்லை சத்யா வைகோவின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இதனை தொடர்ந்து கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொது செயலாளர் வைகோ முகநூலில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சி.ஏ. சத்யா அவர்கள் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கண்ணியத்தை சீர்குலைத்தும், கழகத் தலைமைக்கு எதிராக செயல்பட்டும் வருவதால், அவர் வகித்து வரும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். கழகச் சட்டதிட்ட விதிகளின்படி அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் அவர் தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அனுப்ப வேண்டும். இல்லையெனில் கழகத்தின் சட்டதிட்ட விதிகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்”

என்று தெரிவிக்கபட்டுள்ளது.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.