மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவு; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல்

நடிகர் இன்னசென்ட் மறைவிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இன்னசென்ட் (75). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் இன்னசென்ட்…

நடிகர் இன்னசென்ட் மறைவிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இன்னசென்ட் (75). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் இன்னசென்ட் கேரள மாநிலம்  கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மார்ச் 3 ம் தேதி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.  சுவாசப் பிரச்சினைகள் மற்றும் மாரடைப்பு  காராணமாக நேற்றிரவு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடிகர் இன்னசென்ட் மறைவிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், தன் தன்னிச்சையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் இன்னசென்ட். அவர் ஒரு சிறந்த கலைஞராகவும், சமூகச் சூழலையும் மக்களின் வாழ்க்கையையும் தொட்ட ஒரு பொது ஆர்வலராகவும் இருந்தார். திரையுலகின் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர். குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கினார்.

இதையும் படிக்கவும் : பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்

எப்போதும் இடதுசாரி மனநிலையைக் கடைப்பிடிக்கும் அவர் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் வேண்டுகோளின்படி மக்களவை வேட்பாளராக அவர் களமிறங்கியதையும், வெற்றி பெற்ற பிறகு, நாடாளுமன்றத்தில் கேரளாவின் கோரிக்கைகளை முக்கியமாக எழுப்பியதையும் கேரளா நன்றியுடன் நினைவு கூரும்.

கடைசி வரை உறுதியுடன் நோயை எதிர்த்துப் போராடி, தனது சொந்த வாழ்க்கையின் மூலம் இன்னசென்ட் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்கினார். நோயைக் கேட்ட மாத்திரத்தில் மயங்கி விழும் பலரிடையே நோய்த் தொல்லை இருந்தபோதிலும் அவர் தனது தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் மேற்கொண்டார்.

இடதுசாரி அரசியலின் ஒரு பகுதியாக வேலை செய்ய முடிந்தது என்பது அவரது வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க அத்தியாயம் என்று இன்னசென்ட் கூறியிருப்பார். திரைப்படங்களைப் போலவே வாழ்க்கையிலும் நகைச்சுவையான வார்த்தைகளாலும், நடத்தையாலும் சமூகத்தை மகிழ்விப்பதே தனது வேலை என்று இன்னசென்ட் நம்பினார். பல தசாப்தங்களாக மலையாளத் திரையுலகில் இருந்த அவர், திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தை நீண்ட காலமாக வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னசென்ட்டின் மரணம் நமது கலை, பண்பாட்டுத் துறைக்கும், பொது அரசியல் அரங்கிற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளிகளுக்கு மொத்த இழப்பு. இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.