ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் வாங்குவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விடிய, விடிய ரசிகர்கள் காத்திருந்தனர்.
கிரிகெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. 70 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் 7 லீக் ஆட்டங்கள் நடக்க உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது.
இதையும் படிக்கவும் : மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவு; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல்
சென்னையில் முதல் போட்டியானது ஏப்ரல் 3ம் தேதி தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. ஆன்லைனிலும், நேரடி விற்பனையிலும் 1500 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரையான அளவில் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது.
இப்போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை PAYTM மற்றும் http://www.insider.in மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு கவுண்டர்களில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 9:30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்க இருப்பதால் நேற்று மாலை 4 மணியில் இருந்து நேரடியாக டிக்கெட் வாங்குவதற்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் வாசலில் ரசிகர்கள் ஏராளமானோர் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டைகளை வங்குவதற்காக திருச்சி, மதுரை, திருநெல்வேலி, ஆந்திரா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் குவிந்தனர். மேலும் காவல்துறையினர் ரசிகர்களை சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட் கவுண்டர் அருகே அனுமதிக்காததால் ரசிகர்கள், சேப்ப்பாக்கம் சாலையோரம் அமர்ந்தும், உறங்கியும், விடிய விடிய வாங்க காத்திருந்தனர். ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே சென்றதால் சேப்பாக்கம் சாலை முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.







