போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியகால பலன்களை வழங்க மநீம வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியகால பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி…

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியகால பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 3 ஆண்டுகளாக இருந்த பழைய ஊதிய ஒப்பந்த காலத்தை 5 ஆண்டுகளாக மாற்றியமைத்து தொழிலாளர்கள் விரோத போக்கினை கடைப்பிடித்தார். 2006-ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு தொழிற் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று அப்போது முதல்வராக இருந்த கலைஞர் ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக மாற்றி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வயிற்றில் பால் வார்த்தார்.

அதனடிப்படையில் நடைமுறையில் இருந்து வந்த 3 ஆண்டுகால 14-வது ஊதியக்குழு ஒப்பந்தம் 01.09.2019-ல் காலாவதியாகப் போன நிலையில் கொரோனா கால ஊரடங்கை காரணமாக வைத்து அதிமுக அரசு பேச்சுவார்த்தையை தள்ளிப்போட்டு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மாதம் 1000 ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கியது.

மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதிமுக கடைப்பிடித்து வந்த நடைமுறைகளை பின்பற்றி வந்த நிலையில் போக்குவரத்து கழக தொழிற் சங்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 14-வது ஊதிய குழு ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது 3 ஆண்டுகள் என்றிருந்த ஊதியக்குழு ஒப்பந்த காலத்தை அரசின் நிதிச்சுமையை காரணம் காட்டி 4 ஆண்டுகளாக மாற்றியிருப்பதும், தொழிலாளர்கள் 25% ஊதிய உயர்வு கேட்ட நிலையில் வெறும் 5% ஊதிய உயர்வு மட்டுமே வழங்க முடிவு செய்திருப்பதும் நியாயமற்றது மட்டுமின்றி போக்குவரத்து கழக தொழிலாளர்களை வஞ்சிக்கும் செயலாகும்.

அதுமட்டுமின்றி அரசின் அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் ஓய்வுபெற்ற அன்றே ஓய்வுகால பலன்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வரும் போது கடந்த 2020 மே மாதத்திற்குப்பின் மரணமடைந்த, விருப்ப ஓய்வில் சென்ற, ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இதுவரை ஓய்வுகால பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை இவை குறித்து 14-வது ஊதியக்குழு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதிச்சுமையை காரணம் காட்டி பேச மறுத்திருப்பது தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

எனவே, போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். சுமார் 85 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டுக்குப் பிறகு உயர்த்தி வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படியை உயர்த்தியும், போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியகால பலன்களை வழங்கிடவும்  உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.