இந்திய ராணுவ முகாமில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தும்மக்குண்டுவை அடுத்த டி.புதுபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இராணுவ வீரர் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் வீரமரணமடைந்தார். மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் கடந்த 2019ஆம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்றுவிட்டு 2019ஆம் ஆண்டே இராணுவத்தில் சேர்ந்தார். தர்மராஜ் – ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தையில் ஒருவர் லட்சுமணன். அண்ணன் இராமன் பி.பி.ஏ. முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் அவரது தாயாரான ஆண்டாள் இராணுவ வீரரின் படத்தை வைத்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இராணுவ வீரரின் மரணத்தால் கிராமமே சோகமயமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சி நிர்வாகிகள், தனியார் அமைப்பினர் வீட்டில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் தீவிரவாதிகளின் தாக்குதலில்
வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராஜோரி மாவட்டம், தர்ஹால் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள து.புதுப்பட்டியைச் சேர்ந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணன் உள்ளிட்ட 3 வீரர்களுக்கு மக்கள் நீதி மய்யம் அஞ்சலி செலுத்துகிறது. மேலும், மதுரை வீரர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/maiamofficial/status/1557995227431940096?t=6Xu2OUPiMqeRR7ow5ZzoLA&s=08
-ம.பவித்ரா








