அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதில் அளித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பிகாரில் மீண்டும் முதலமைச்சராகி உள்ள நிதிஷ் குமார் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, வரும் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த நிதிஷ் குமார், அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்றும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் அது நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளை தேசிய அளவில் ஒன்றிணைக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாகவும், நேர்மறை எண்ணத்தோடு தான் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறினார். தன்னால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வேன் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
நரேந்திர மோடி 2014ல் வெற்றி பெற்று பிரதமரானார்; ஆனால், 2024லும் அவர் வெற்றி பெறுவாரா என்றும் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் துணைத் தலைவரும் பிகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேச இருக்கிறார்.
பிகாரில் கடந்த 10ம் தேதி பொறுப்பேற்ற புதிய அரசுக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. புதிய அரசு வரும் 24ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோர உள்ளது. அதற்கு முன்பாக, அமைச்சரவை விரிவாக்கத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஆலோசிப்பதற்காக தேஜஸ்வி யாதவ், சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.









