இலங்கையில் அனுரா திசநாயக்கா தலைமையிலான புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து ராஜபக்சே குடும்பம் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் முக்கிய அரசியல் குடும்பமாக விளங்கும் ராஜபக்சே குடும்பத்தின் கோத்தபய ராஜ்பக்சே, ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சேவின் மூத்த மகனும் சட்டசபை உறுப்பினருமான நாமல் ராஜபக்சே மீதும் விளையாட்டுதுறை முதலீட்டை கையாடல் செய்தது தொடர்பாக காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே போல முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே மீதும் 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றுலா துறை நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷிதா ராஜபக்சே அந்நாட்டின் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
புலனாய்வாளர்கள் முன் ஆஜராகுமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையம் (CIABOC) விடுத்த அழைப்பாணைக்கு இணங்க யோஷிதா அந்த ஆணையத்திற்கு வருகை தந்தார்.
கடற்படைப் பயிற்சி மாணவியாக இருந்த யோஷிதா, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலேயே 2006-ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிர்வாகப் பிரிவில் அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக ஊழல் விசாரணை ஆணையம் (CIABOC) அறிவுறுத்தலின் படி விசாரணைக்கு ஆஜரான போது யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யோஷிதா ராஜபக்சேவுக்கு பிணை வழங்கப்பட்டது




