கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்…..
மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தை பெறலாம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருடபுராணம், கந்தபுராணம், பத்மபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிவராத்திரி
புராணங்களின்படி, சமுத்திரமந்தன் என்று அழைக்கப்படும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்கள் கடைந்த போது விஷம் கடலில் கலந்தது. இது முழு உலகையும் அழிக்கக்கூடும் என்று தேவர்கள் பயந்து போனார்கள். இதையடுத்து அவர்கள் சிவபெருமானிடம் வந்து முறையிட்டதால், அந்த கொடிய விஷத்தை குடித்து அதை விழுங்காமல் தொண்டையில் வைத்திருந்தார். இதனால் சிவபெருமானின் தொண்டை நீலநிறமாக மாறியது. இதன் காரணமாக அவர் ‘நீல்காந்தா’ என்று அறியப்பட்டார். இது நடைபெற்ற தினமே சிவராத்திரி என இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.
சிவாலய ஓட்டம்
சுண்டோதரன் என்னும் அரக்கன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக கடும் தவம் புரிந்து வந்தான். அவனின் கடுமையான தவத்தால் மனம் குளிர்ந்த சிவபெருமானும் அவன் முன் தோன்றி, “சுண்டோதரா உன் தவத்தால் யாம் உளம் குளிர்ந்தோம். உனக்கான வரத்தை நீ கேப்பாயாக” என்று கூறினார். இதையடுத்து மூலோகத்திலும் எந்த சக்தியாலும் தனக்கு அழிவு நேரக் கூடாது எனவும், தானே சக்தியில் சிறந்தவனாக இருக்க வேண்டும் எனவும் வரம் கேட்டதோடு, தான் கையை சுண்டுபவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் எனவும் கேட்டான். சிவபெருமானும் அவன் கேட்ட வரத்தை அவனுக்கு அருளினார்.
ஆனால் தீய எண்ணம் கொண்ட சுண்டோதரனோ சிவபெருமானை பார்த்தே கையை சூண்ட முற்பட்டான். தானே இந்த உலகத்தை ஆளவேண்டும் என்ற ஆசை கொண்டான். இதனால் சிவபெருமான், விஷ்ணுவிடம் சென்று முறையிட்டு உதவி கேட்டார். விஷ்ணுவும் உதவுவதாக வாக்களித்தார். இதையடுத்து மோகிணியாக மாறிய விஷ்ணு சுண்டோதரன் முன்பு தோன்றி அவனை வசியப்படுத்த நடனம் புரிந்தார்.
மறுபுறம் சுண்டோதரனுக்கு பயந்து சிவபெருமான் திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு என 12 இடங்களில் ஓடத் தொடங்கினார். நடனத்தின் இறுதியில் சுண்டோதரன் தன்னை தானே சுண்டும்படியாக விஷ்ணுபகவான் செய்ததையடுத்து சுண்டோதரன் எரிந்து சாம்பலானான். சிவபெருமான் ஓடிய 12 இடங்களிலும் சிவலாயங்கள் கட்டப்பட்டு அந்த 12 சிவாலயங்களிலும் சிவராத்திரி தினத்தன்று சிவபக்தர்கள் சிவாலய ஓட்டம் ஓடி வழிபட்டு வருகின்றனர்.
மகாபாரத போர் முடிவில் கௌரவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். அதன்பிறகு பஞ்ச பாண்டவர்களின் மூத்தவரான தருமர் மன்னராக பதவி ஏற்கும் பட்டாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. தருமரின் பட்டாபிஷேகத்திற்கு புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டது. புருஷா மிருகம் என்பது இடுப்புக்கு மேல் மிருக உருவமும், இடுப்புக்கு கீழ் மனித உடலும் கொண்டது. மிகுந்த சிவபக்தி உடையது. புருஷா மிருகம் தான் வாழும் எல்லைக்குள் வருபவர்களை பிடித்து உண்டுவிடும். புருஷாமிருகத்தை அது வாழும் எல்லைக்கு வெளியே கொண்டு வந்தால் அவர்களின் கட்டளைக்கு கட்டுப்படும்.
தன் பலத்தின் மீது அதீத கர்வம் கொண்ட பீமன் புருஷா மிருகத்தின் எல்லைக்குள் புகுந்து அதை எல்லைக்கு வெளியே துரத்திக்கொண்டு வர ஒப்பு கொண்டார். பாண்டவர்களுக்காக பகவான் கண்ணன், பீமனிடம் சென்று 12 ருத்ராட்சங்களை வழங்கி ஒரு ஆலோசனையும் கூறினார்.
புருஷா மிருகம் தன்னை மறந்து தன் எல்லைக்கு வெளியே வரவேண்டும் என்றால், மிகுந்த ஆவேசத்துடன் உன்னை தொடர வேண்டும் என்றால் ஒரே ஒரு வழி தான் உள்ளது. மிகவும் முரட்டுத்தனமான சிவ பக்தி கொண்ட அந்த புருஷா மிருகத்துக்கு கேட்கும் படியாக சிவநாமத்தை சத்தமாக கூவிக்கொண்டு விளித்தால் போதும்.
அது சிவ எல்லைக்குள் வேறொரு மந்திரத்தை உச்சரிப்பவன், எவன் என ஆத்திரத்துடன் துரத்த ஆரம்பிக்கும். அப்போது நீ அதனை எளிதாக அதன் எல்லையிலிருந்து வெளியே கொண்டு வர முடியும் என்று கூறினார். கண்ணனின் கருத்துக்கு பீமன் உடன்பட்டார்.
கண்ணன் கூறியது போல சிவபூஜையில் இருந்த புருஷா மிருகம் ஆத்திரத்துடனும், ஆவேசத்துடனும் கிளம்பியது. பீமன் ஓடினார். அப்போது கண்ணன் வழங்கிய ருத்ராட்சங்களில் ஒன்றை கீழேபோட்டார். அந்த ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. புருஷா மிருகம் சிவலிங்கம் முன்னாடி அமர்ந்து சிறிது நேரம் வழிபட்டது. அதற்குள் கொஞ்சம் இளைப்பாறிய பீமன் மீண்டும் ஓட தொடங்கினார். மீண்டும் ஆத்திரத்துடன் துரத்திய புருஷா மிருகம் மீண்டும் பீமனை மடக்கியது. அப்போது மீண்டும் ருத்ராட்சத்தை கீழேபோட்ட போது அது சிவலிங்கமாக மாறியது. மீண்டும் சிவலிங்கம் அமர்ந்து வழிபட்டார். இது 12 முறை தொடர்ந்து நடைபெற்றது.
இப்படி திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலோங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய 12 இடங்களில் ஓடி தன்னைவிட்டு விட வேண்டும் என பீமன் வாதிட்டார். அப்போது ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், ஒரு கால் வெறியேயும் இருந்தது. எனவே இருவருக்குள்ளும் வாதம் நடைபெற்றது. இதற்கு தீர்வு காணும் வகையில் வழக்கு தருமரிடம் சென்றது.
தம்பி என்றும் பாராமல் பீமன் உடலை இரண்டாக பிளந்து ஒரு பகுதியை புருஷா மிருகத்திடம் தரும்படி தருமர் தீர்ப்பு கூறினார். தருமரின் நீதி வழங்கும் நியாயத்தை பார்த்து மெய்சிலிர்த்த புருஷா மிருகம் பீமனை விடுவித்தது. இதையடுத்து 12வது ருத்ராட்சத்தை பீமன் கீழே போட்ட இடத்தில் தோன்றி சிவலிங்கத்தில் மகாவிஷ்ணுவின் முகம் தெரிந்தது. இதனால் புருஷா மிருகம் குழப்பம் அடைந்தது. அப்போது சிவனும், ஹரியும் கலந்த சங்கர நாராயணராக புருஷா மிருகத்துக்கு காட்சியளித்து இறைவன் ஆட்கொண்டால், சிவனும், ஹரியும் ஒன்று என்பதை உணர்ந்து கொண்ட தனது மூர்க்க தனத்தை விட்டு உள்ளத்தெளிவு அடைந்தது புருஷா மிருகம். இதையடுத்து தனது எல்லையைவிட்டு வெளியே வந்து பட்டாபிஷேகத்திற்கு பால் கொடுத்தது.
கண்ணன் பீமனுக்கு கொடுத்த 12 ருத்ராட்சங்களுடன் அமைந்த சிவாலயங்களை மையப்படுத்தி தான் குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடக்கிறது. சிவராத்திரி தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். 12 ராசிகளுக்கும் 12 சிவாலயங்கள் உள்ளது. இந்த 12 சிவாலயங்களிலும் சிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தினத்தில் பக்தர்கள் கால்நடைப்பயணமாக பயணித்து சிவனை தரிசனம் செய்வர். இதனை சிவாலய ஓட்டம் என்பர். பக்தர்கள் காவி துண்டு, காவி வேஷ்டி, கையில் விழுதி, பனையோலை விசிறி உடன் பக்தர்கள் ஓட தொடங்குவார்கள்.
திருமலை மகாதேவர் கோயில், திக்குறிச்சி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வர் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம், கல்குளம் நீலகண்டசாமி கோயில், மேலாங்கோடு மகாதேவர் ஆலயம், திருவிடைக்கோடு கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிக்கோடு சிவன் கோயில், திருநட்டலாம் சங்கர நாராயணர் கோயில் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரினம் செய்வர்.
சிவராத்திரிக்கு முன்தினமே பக்தர்கள் ஓட தொடங்குவர். விடிய, விடிய பக்தர்கள் ஒவ்வொரு கோயிலாக ஓடி சென்று சாமி தரிசனம் செய்வர். அப்போது பக்தர்கள் எழுப்பும் கோவிந்தா…., கோபாலா…. என்ற பக்தி முழக்கம் விண்ணை அதிரவைக்கும். மொத்தம் 110 கி.மீ. தூரத்தையும் ஓடியும், நடைபயணமாகவும் சென்று பக்தர்கள் சிவராத்தியின் போது சிவனை தரிசனம் செய்வர்.