மதுராந்தகம் அருகே மனைவியின் இறப்பிற்கு காரணமான கணவரை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த இந்தலூர் கிராமத்தில் சிலம்பரசன்-வைத்தீஸ்வரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத காரணத்தால், அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வைத்தீஸ்வரி மர்மமான முறையில், வீட்டின் மேல் மாடியில் உள்ள கூரை வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அச்சரப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், கணவர் சிலம்பரசன் தலைமறைவானது தெரியவந்தது.
அண்மைச் செய்தி: மதுரை, ஓசூர், கடலூர் – புதிய மேயர்கள் பதவியேற்பு
இதனைத் தொடர்ந்து வைத்தீஸ்வரியின் உயிரிழப்புக்கு காரணமான சிலம்பரசனை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








