மதுரையில் நடந்த சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்திற்கு, பயணிகள் கொண்டுவந்த சிலிண்டர் தான் பிரதான காரணம் என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார்.
மதுரையில், சுற்றுலா ரயில் பெட்டியில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரையில் கடந்த 26ம் தேதி ரயில் பெட்டியில் பிடித்த தீ விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி 2வது நாளாக விசாரணை நடத்தினார். ஏற்கனவே, 7 பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார், தீயணைப்புத் துறையினரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ரயில் பெட்டி தீ விபத்தை நேரில் பார்த்த 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படியுங்கள் : அமெரிக்காவில் ’ஜெயிலர்’ வெற்றி கொண்டாட்டம் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.எம்.செளத்ரி, “நாகர்கோவிலில் காலியான சிலிண்டரை பயணிகள் மீண்டும் நிரப்பி உள்ளனர். சிலிண்டர் தான் விபத்திற்கான பிரதான காரணம். கழிவறை அருகே வைக்கப்பட்டிருந்த போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதில் தீ பற்றியதால் சிலிண்டர் வெடித்துள்ளது.
இது தொடர்பாக இதுவரை 20 நபர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனை செய்யவில்லை என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. லக்னோவில் உள்ள ரயில்வே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும்” என்ற்உ தெரிவித்தார் .







