முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: தவறு செய்துவிட்டேன், அதற்காக வெட்கப்படவில்லை – உ.பி. ஆசிரியை!

வீட்டுப்பாடம் செய்யாத முஸ்லிம் மாணவரை, சக மாணவர்களை வைத்து அடித்த உ.பி. ஆசிரியர், தான் தவறு செய்துவிட்டதாகவும், ஆனால் அதற்காக வெட்கப்படவில்லை என்றும் பதிலளித்துள்ளார். உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த  குப்பாபூர் கிராமத்தில்…

வீட்டுப்பாடம் செய்யாத முஸ்லிம் மாணவரை, சக மாணவர்களை வைத்து அடித்த உ.பி. ஆசிரியர், தான் தவறு செய்துவிட்டதாகவும், ஆனால் அதற்காக வெட்கப்படவில்லை என்றும் பதிலளித்துள்ளார்.

உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த  குப்பாபூர் கிராமத்தில் நேஹா பப்ளிக் பள்ளி உள்ளது. இங்கு 2-ம் வகுப்பில் படிக்கும் இஸ்லாமிய மாணவர் ஒருவரை மாற்று மதத்தை சேர்ந்த மாணவர்களை அழைத்து அடிக்குமாறு ஆசிரியையும் பள்ளி முதல்வருமான திரிப்தா தியாகி என்பவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், பள்ளி ஆசிரியை ஒரு சிறுவனை வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களைக் கொண்டு அடிப்பதை பார்க்க முடிகிறது. அந்த 7 வயது மாணவரால் சரியாக பாடம் வாசிக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியை சக மாணவர்களைக் கொண்டு அந்த மாணவரை அடிக்க சொல்கிறார். இது மட்டுமின்றி மாணவனின் மதம் குறித்தும் ஆசிரியர் கருத்து தெரிவிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து முசாபர்நகர் காவல்துறை, ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து, நாடு முழுவதும் எதிர்வினைகள் வரத் தொடங்கின. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசிரியையும் பள்ளி முதல்வருமான திரிப்தா தியாகி, ”எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. எங்கள் இடத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்கள் பள்ளியில் அதிக முஸ்லிம் மாணவர்கள் இருக்கிறார்கள். குழந்தையிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பெற்றோரிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாணவனின் உறவினர்தான் வீடியோவை எடுத்தார். ஆனால், இரு தரப்பினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், அந்த வீடியோ திரிக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பாடம் செய்யாத மாணவரை, சக மாணவா்களை வைத்து அறையச் செய்தது எனது தவறுதான். ஆனால் அதற்காக வெட்கப்படவில்லை. நான் மாற்றுத்திறனாளி என்பதால், அவ்வாறு செய்தேன்” என்று ஆசிரியை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆசிரியை மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 323, 504 ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்விரு பிரிவுகளுமே ஜாமீனில் வெளிவரக் கூடியவை. அத்துடன், உடனடி கைது நடவடிக்கையும் தேவைப்படாத பிரிவுகளாகும். இதனிடையே, சம்பந்தப்பட்ட பள்ளியிடம் விளக்கம் கேட்டு, மாநில கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும், சமூக ஊடகங்களில் சிறுவனின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு என்சிபிசிஆா் கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.