அரசு மருத்துவமனை தரத்தை கண்காணிக்கும் மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என மதுரை இராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நோயாளிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், சுகாதாரத்துறையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் அடிப்படை தேவைகள், கூடுதல் கட்டிடங்கள் பல்வேறு நிதிகள் மூலமாக செய்யப்பட்டு வருகின்றன.
இதையடுத்து மதுரை உட்பட பத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தரத்தினை கண்காணிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டம் மூலம் தமிழக முழுவதும் உள்ள 10 மருத்துவ கல்லூரிகளில் தர மேலாளர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்மாவட்டத்தின் முக்கிய அரசு மருத்துவமனையாக விளங்கக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தரத்தை கண்காணிக்கும் மேலாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோயாளிகளின் பாதுகாப்பு, தீ தடுப்பு வசதி மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட வசதிகளை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தர மேலாளராக பணியாற்ற விரும்பும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் எனவும், அரசு மருத்துவமனை தர மேலாளர் ஊதியமாக 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் பெயரில் விண்ணப்பிக்க மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.








