மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் பாஜகவை சேர்ந்த ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
துணை முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் பொறுப்பேற்றார்.
சபாநாயகராக பதவி வகித்து வந்த காங்கிரஸ் கட்சியின் நானா படேல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பொறுப்பை ராஜிநாமா செய்தார். அவர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்பதற்காக தனது பொறுப்பை ராஜிநாமா செய்திருந்தார்.
இதையடுத்து, மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் இடம் காலியானது.
இந்நிலையில், அந்த இடத்தை நிரப்புவதற்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் நடந்த சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர், உத்தவ் தாக்கரே ஆதரவு எம்எல்ஏ ராஜன் சல்வி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் நர்வேகர் மொத்தம் 164 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜன் சல்வி 107 வாக்குகளையே பெற்றார்.
முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை திங்கள்கிழமை எதிர்கொள்கிறார்.

முன்னதாக, சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மகாராஷ்டிராவில் ஆட்சி புரிந்து வந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி வகித்து வந்தார்.
இவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட ஏக்நாத் ஷிண்டே திடீரென தனது 35 க்கும் மேற்பட்ட ஆதரவு எம்எல்ஏக்களுடன் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.
இதையடுத்து நடந்த பரபரப்பான அரசியல் நகர்வுகள் முடிவில், பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







