மதுரை ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு.. 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!

மதுரை கார்சேரி ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் தற்போதைய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் சக்கிமங்கலம்…

மதுரை கார்சேரி ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் தற்போதைய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் அதிமுக கிளைச்செயலாரும், கார்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்த கருப்புச்சாமிக்கும், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் முனியசாமிக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு கருப்புச்சாமி தனது மகனுடன் நின்றுகொண்டிருந்தபோது அவரை கார்சேரி கோயில் பகுதியில் அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்

இது குறித்து சிலைமான் காவல்துறையினர் வெட்டிப்படுகொலை செய்த வழக்கில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் முனியசாமி, அவரது உறவினர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட 12பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இந்த வழக்கானது மதுரை மாவட்ட 6வது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் மதுரம் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். தேர்தல் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கார்சேரி ஊராட்சிமன்ற தலைவர் கருப்புசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தை சேர்ந்த தமிழ்செல்வம், சௌந்திரபாண்டி, பிரபுதேவா, தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் இளவரசன், கவியரசன், அஜித், வெண்ணிலா, முனியசாமி ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராத தொகை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருந்து அருள் மணிகண்டன், பாலமுருகன், ராஜாங்கம் ஆகிய மூவர் விடுவிக்கப்பட்ட நிலையில் மணிக்குமார் என்பவர் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த போதே உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்ட 8 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி திமுக ஊராட்சி மன்ற செயலாளாராக கட்சி பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.