நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா குறித்த வீடியோக்களை நீக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூடியூப் சேனல்கள் சமீபத்தில் வதந்தி ஒன்றை பரப்பின. இதையடுத்து தவறான உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆராத்யா பச்சன் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அதில், அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். தான் மைனர் என்பதால் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி. ஹரி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆராத்யா பச்சனின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதை இணையதளங்கள் நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் சரி, சாமானியரின் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடன்நடத்தப்படுவதற்கு உரிமை உண்டு. குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது முற்றிலும் சகிக்க முடியாதது என கூறினார்.







