தவறு செய்யும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கட்சி ரீதியாக மட்டுமின்றி சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன். யாரோ செய்யும் தவறினால், முதல்வராகிய நானும், கோடிக்கணக்கான தொண்டர்களும் வெட்கித் தலை குனியும் நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது. கவுன்சிலர்கள் முதல் மேயர்கள் வரை யார் மீதும் எந்த புகாரும் வரக்கூடாது. ஒழுங்கீனங்கள், முறைகேடுகள் அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என கடும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தாம் ஒரு சர்வதிகாரியாக மாறுவேன் என எதனை மனதில் வைத்து அப்படி கூறினார் என்பதை பார்க்கலாம்.
தி.மு.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், மக்கள் பணிகளின் முதல் படி உள்ளாட்சி அமைப்புகள்தான். மக்கள் தொண்டுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களின் ஒவ்வொருவரின் கையெழுத்தும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் எனக் கூறினார்.
50 ஆண்டுகால உழைப்பில் கிடைத்தது தான் இந்த முதல்வர் பதவி. கோடிக்கணக்கான கழகத் தொண்டர்கள் கொடுத்த பதவி இது. என்னை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். எனவே களங்கம் ஏற்படுத்தும் செயலை யாரும் செய்யக்கூடாது. கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கம் ஏற்படும் நிலையை யாரும் ஏற்படுத்தி விடக்கூடாது. யார் தவறு செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சர்வதிகாரி ஏன் ?
தாம் சர்வதிகாரியாக மாறுவேன் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்த காரணம் என்ன என திமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசியபோது, கடந்த திமுக ஆட்சியில் ஏற்பட்ட அவப்பெயர் காரணமாக இரு முறை ஆட்சியை கடந்த 10 ஆண்டுகளில் இழந்துள்ளோம். இதில் மிகப்பெரிய குற்றச்சாட்டே உள்ளாட்சி பிரதிநிதிகளின் மோசமான நடவடிக்கைகள் என அப்போதே அவரிடம் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதனை மனதில் வைத்துதான் அவர்களுக்கு என தனியாக ஒரு மாநாடு நடத்தி கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
மேலும், ஐ பேக் நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த சட்டமன்ற தேர்தலோடு முடிவுற்றுவிட்டது. அதன் பின்னர் தற்போது Peninsular Research Operation [P.R.O] என்ற நிறுவனம் திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற தகவலை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் கடந்த வாரம் அறிவாலயத்தில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கவுன்சிலர்களை அமைச்சர் கே.என்.நேரு ஒரு பிடிபிடித்தார்.
தற்போது முதலமைச்சர் என்ற முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏதோ எச்சரிக்கை மட்டும்தான் விடுப்பார். நாம் வழக்கம்போல் நடந்து கொள்ளலாம் என்ற பகல் கனவில் இருப்பவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை பாயும் என்பதில் எள் அளவும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என்கின்றனர்.
மேலும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு என ஒரு பெருங்கூட்டம் உருவாகி வருகிறது. உள்ளபடியே மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்டாலின். இதனால் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் யாரும் வருத்தம் அடைய கூடாது என்பதால், திமுகவின் அதிகார பூர்வ ஏடான முரசொலியில் கூட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டும் அவரது புகைப்படத்தை விளம்பரங்களில் பயன்படுத்தலாம். மற்றப்படி அவர் கலந்து கொள்ளாத நிகழ்ச்சி விளம்பரங்களில் அவரது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் அவர் திமுக தொண்டர்களுக்கு அவர் சொல்ல வரும் கருத்து என்பது மனுநீதி சோழனாகவும் இருப்பேன். சர்வதிகாரியாகவும் இருப்பேன் என்பதே என திமுக மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இது திராவிட மாடலின் ஒரு பகுதி என திமுக நிர்வாகிகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.
இராமானுஜம்.கி.










