மதுரை மத்திய சிறையில் விரைவில் ஃப்ரீடம் ஃபில்லிங் ஸ்டேஷன் தொடங்கவுள்ளதால், அங்குள்ள சிறைவாசிகளுக்கு பெட்ரோல் விற்பனை நிலைய பயிற்சி தீவிரமாக அளிக்கப்பட்டுவருகிறது.
மதுரை மத்திய சிறையில் 1500க்கு மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் உள்ளனர். இங்குள்ள தண்டனை சிறைவாசிகள் அவர்கள் தண்டனை காலம் முடிந்த பின் அவர்களது வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் அவர்கள் சிறைக்குள் இருக்கும்போதே அளிக்கப்பட்டு வருகிறது
அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் தமிழ்நாடு சிறைத் துறையுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தை ஃப்ரீடம் ஃபில்லிங் ஸ்டேஷன் (Freedom Filling Station) என்ற பெயரில் துவங்கி சிறைவாசிகளுக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது.
முதற்கட்டமாக இத்திட்டத்தில் புழல், வேலூர் பாளையங்கோட்டை புதுக்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் செயல்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக 2ம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 6 முக்கிய இடங்களில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் துவங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்நிலையில் இந்த பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் சிறைவாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மதுரை மத்திய சிறையில் உள்ள தகுதியான 41 தண்டனை சிறைவாசிகளுக்கு பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிவது குறித்தான களப்பயிற்சி குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது
இதில் மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் பழனி மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் முன்னிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை பிரிவு முதுநிலை மேலாளர் கோபாலகிருஷ்ணன், மதுரை பிரிவு தலைமையக அதிகாரி மகேஷ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் சிறைவாசிகளுக்கு நல்ல வேலைவாய்ப்புள்ள தொழில் பயிற்சியும், வருமானமும் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.







