ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்ற ஆறு நாட்டு அணிகளின் கேப்டன்கள் தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து ஒற்றுமைக்கான முன்னெடுப்பில் ஈடுபட்டனர்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு
எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்று
வருகிறது. 6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரானது இம்மாதம் 3 ஆம் தேதி முதல்,
வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் முடிவுறும் நிலையில், ஆசிய கோப்பை தொடரில்
பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.சந்தித்தார்.
இந்தியா, மலேசியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின்
கேப்டன்கள் அனைவரும் தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் ஹாக்கி மைதானத்திற்கு வருகை தந்தனர். மேலும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட அனைவரும் வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தனர்.
பின்னர், 6 நாடுகளின் அணித்தலைவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 15
நிமிடம் உரையாற்றினார். இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும்
கடைசி லீக் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளதை தொடர்ந்து, தமிழக
பாரம்பரிய உடையுடன் ஒற்றுமையை முன்னிறுத்தி அனைத்து கேப்டன்களும்
ஒருங்கிணைந்து மேற்கொண்ட சந்திப்பு கலாச்சார பாகுபாட்டை தகர்த்து ஒற்றுமையை நிலைநிறுத்தும் நிகழ்வாக காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.







