மதுரை பேருந்து விபத்து: முதலமைச்சர் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி…!

மதுரை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், “மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி அருகே இன்று (13.07.2026) அதிகாலை சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மதுரையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த திருநெல்வேலி, சமாதானபுரத்தைச் சேர்ந்த திருமதி சிறியபுஷ்பம் (வயது 56) க/பெ. ஜெயசீலன், இடையமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திரு. ஆனந்தராஜ் (வயது 46) த/பெ. பொன்னுச்சாமி, திருச்சியைச் சேர்ந்த திரு. சூர்யா (வயது 29) த/பெ. கணேசன், திருவாரூர் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த திரு. முகமது யாசின் (வயது 60) த/பெ. கலில் ரஹ்மான், திருநெல்வேலி, திசையன்விளை பகுதியைச் சேர்ந்த திரு. ஆபிரகாம் (வயது 40) த/பெ. ஜான்சன், ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயும், மதுரை, வஞ்சி நகரத்தைச் சேர்ந்த திரு.பெருமாள் (வயது 71), த/பெ. சின்னையா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் வருத்தமும் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஏழு நபர்களுக்கும், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 15 நபர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஏழு நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 15 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.