மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் மாடுபுடி வீரர்கள்!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் தைப் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும், சுமார் 600 வீரர்களும் களத்தில் உள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளின் திமிலை காளையர்கள் அடக்கி வருகின்றனர். இதில் முதல் பரிசாக வீரருக்கு காரும், காளைக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதனிடையே முதல் சுற்றில் 100 மாடுகள் களம் கண்ட நிலையில், 11மாடுகள் மட்டுமே பிடிபட்டுள்ளன. 11 வீரர்கள் தலா ஒரு மாட்டை பிடித்துள்ளனர்.

தொடர்ந்து 2-வது சுற்றில் 200 மாடுகள் களம் இறங்கிய நிலையில், 34 மாடுகள் பிடிப்பட்டன. 7 காளைகளை அடக்கி சோழவந்தானைச் சேர்ந்த பிரகாஷ் முதலிடத்தில் உள்ளார். 3 காளைகளை அடக்கி சாப்டூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் 2-வது இடத்திலும், அதைபோல 3 காளைகளை அடக்கி உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துபாண்டி என்பவர் 3-வது இடத்திலும் உள்ளார். அனுப்பானடி (100) 2 மாடுகளும், சூர்யா, தேனூர் (89) – 2 மாடுகளும் பிடித்துள்ளனர்.

தொடர்ந்து 3 வது சுற்றில் 288 மாடுகள் களமிறங்கிய நிலையில் 61காளைகள் பிடிபட்டது. முடிவில், கார்த்தி (111) – 16 காளைகளை அடக்கி முதலிடமும், பிரகாஷ்(58) – 6 காளைகளை அடக்கி இரண்டாம் இடமும், விக்னேஷ் (77) – 3 காளைகளை அடக்கி மூன்றாம் இடமும், முத்துப்பாண்டி (86) – 3 காளைகளை அடக்கி நான்காம் இடம் பிடித்துள்ளனர். முடிவில் 8 மாடுபிடி வீரர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தொடர்ந்து 4 வது சுற்றில், 377 மாடுகள் களமிறங்கிய நிலையில் 89 காளைகள் பிடிபட்டது. இதில் மொத்தம் 12 வீரர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முன்னிலையில் உள்ள மாடுபிடி வீரர்கள்: கார்த்தி (111) – 16, ரஞ்சித் (189) – 9,பிரகாஷ் (58) – 6.

நான்காம் சுற்றில் தகுதி பெற்றவர்கள்: ரஞ்சித் (189) – 9, டேவிட் வில்சன் (165) – 4, பரணி (160) – 2, ராகுல் (200) – 2 காளைகளை அடக்கி தகுதி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஐந்தாவது சுற்று நடைபெற்று வருகிறது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.