கோயில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளைக் கூடாரங்களாகிவிட்டதாகவும், இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் வலியுறுத்தியுள்ளார்.
விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மதுரை ஆதீனம், கோயில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டதாகவும், இதனால், கோயில் சொத்துக்கள் கொள்ளை போவதாகவும் குறிப்பிட்டார். கோயில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளைக் கூடாரங்களாகிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை எனக் கேள்வி எழுப்பினார்.
ஆன்மீகத்தை திராவிட அரசியல் திருடிவிட்டதாகக் குறிப்பிட்ட மதுரை ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு மாற்றாக, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கோயில்கள் இயங்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் வலியுறுத்தினார்.
அதீனங்கள் அரசியல் பேசக் கூடாது என்கிறார்கள், ஆனால், அரசியலை நாங்கள் பேசாமல் வேறு யார் பேசுவது? என அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் பண்பாடும் கலாச்சாரமும் திருக்கோயிலுக்குள் உள்ளது என தெரிவித்த மதுரை ஆதீனம், திராவிட பாரம்பரியம் என்று சொல்பவர்கள் திருநீறு பூச மறுப்பதாகவும் ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்வதாகவும் விமர்சித்தார்.
கோயில் நகைகளை வங்கிகளில் வைப்பு வைப்பதற்காக அவற்றை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றுவதாகக் கூறுகிறார்கள் என்றும், ஆனால், அவற்றை எங்கு உருக்குகிறார்கள் என தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆதீனம் பேசிய வீடியோவைப் பார்க்க
திராவிட பூமி என்றும் பகுத்தறிவு என்றும் கூறுபவர்கள் இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது ஏன் என கேள்வி எழுப்பிய மதுரை ஆதீனம், சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும்போது தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கக் கூடாதா என கேள்வி எழுப்பினார். இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய்
திரைப்படத்தை பார்க்காதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்தாதீர்கள் என பக்தர்களைக் கேட்டுக்கொண்ட மதுரை ஆதீனம், உண்டியல் பணம் அந்தந்த கோயில்களுக்குச் செல்வதில்லை என்றும் அவை வேறு எங்கோ செல்கிறது என்றும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டை திராவிட அரசியல் சீரழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய மதுரை ஆதீனம், பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால், செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என்று பாடியிருப்பார் என்று விமர்சித்தார்.
அரசின் இலவச திட்டங்களை கடுமையாக விமர்சித்த மதுரை ஆதீனம், இன்னும் இலவசமாக கோவணமும் திருவோடும் மட்டும்தான் கொடுக்கவில்லை என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என்றும், அவரது கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் கூறினார்.








