சட்டம், ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலை திறப்பதற்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் ஒரு பிரிவினரை உள்ளே அனுமதிக்க மறுத்து மற்றொரு பிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கோயிலை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் கோயிலை திறக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து அறநிலைய துறை நியமித்த தக்கார் இன்னும் பொறுப்பேற்க முடியவில்லை என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், கோயிலைத் திறந்தால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என கோயிலைத் திறக்குமாறு உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது
தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் இந்த விவகாரத்தில் அறநிலையத் துறைதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
- பி.ஜேம்ஸ் லிசா







