தமிழ்நாடு அரசின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்?… சிவ்தாஸ் மீனாவா? ஹன்ஸ்ராஜ் வர்மாவா?

திமுக ஆட்சியமைத்து முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக யாரை நியமிக்கப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழத்தொடங்கியது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அனுபவத்திற்கு தகுந்த பதவி கிடைக்காமல் ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த…

திமுக ஆட்சியமைத்து முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக யாரை நியமிக்கப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழத்தொடங்கியது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அனுபவத்திற்கு தகுந்த பதவி கிடைக்காமல் ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த இறையன்புவே மு.க.ஸ்டாலின் முதல் தேர்வாக இருந்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தமிழ் வழியில் பயின்றவர், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க கூடிய இறையன்பு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டது அனைவர் மத்தியிலும் வரவேற்கத்தக்க நிகழ்வாக அமைந்தது. தமிழ்நாடு அரசு எனும் இயந்திரத்தின் அச்சாணியாக இருந்து அரசுப்பணியாளர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது, மக்கள் நலத்திட்டங்களை கண்காணிப்பது, மழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வது என பதவிக்கான பணிகளை தாண்டி கூடுதலான பணிகளையும் சிறப்பாக செய்துவந்தார் இறையன்பு. கடந்த இரு அண்டுகளாக தலைமைச் செயலாளாராக பணியாற்றிய இறையன்பு இம்மாத இறுதியுடன் ஓய்வுபெற உள்ளார்.

இறையன்பு போன்ற நேர்மையான அதிகாரிகள் அரசுப் பணியில் தொடர வேண்டும் என விரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீண்ட நாட்களாக காலியாக இருந்த தலைமை தகவல் ஆணையர் பதவியை ஒதுக்க முன்வந்தார். ஆனால் அந்த பதவியை இறையன்பு பெற விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. தலைமைச் செயலாளாராக பணியாற்றிய மன நிறைவுடன் ஓய்வு பெற இறையன்பு முடிவு செய்திருக்கிறார். அதன்படி தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஷகில் அக்தர் அண்மையில் நியமிக்கப்பட்டார். இறையன்புவின் ஓய்வுக்கு பிறகு தமிழ்நாடு அரசின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி தற்போது எழத்தொடங்கியுள்ளது.

அடுத்த தலைமைச் செயலாளர் போட்டியில் சிவ்தாஸ் மீனா, ஹன்ஸ்ராஜ் வர்மா, விக்ரம் கபூர், அதுல்யா மிஸ்ரா, கிருஷ்ணன், எஸ்.கே.பிரபாகர் என பலர் இருந்தாலும் சிவ்தாஸ் மீனா மற்றும் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகிய இருவரில் ஒருவருக்கு அதிக வாய்ப்பிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போட்டியில் முதலிடத்தில் இருக்கும் சிவ்தாஸ் மீனா தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா 1989 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து மாநில மற்றும் மத்திய அரசின் முக்கியத்துறைகளில் பணியாற்றியுள்ளார்.

சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலுமாக குறைக்கப்பட்டதில் சிவ்தாஸ் மீனாவின் பங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை, களப்பணி ஆய்வு என இவரின் நடவடிக்கையால் மழையால் மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருப்பதால் முதலமைச்சர் மத்தியில் சிவ்தாஸ் மீனாவுக்கு நற்பெயர் கிடைத்திருக்கிறது. முதலமைச்சரின் குட் புக்கில் (GOOD BOOK )பெயர் பிரதானமாக இருப்பதால் அடுத்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தான் என அரசு அதிகாரிகளே உறுதியாக சொல்கிறார்கள்.

போட்டியில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஹன்ஸ்ராஜ் வர்மா. தற்போதய தலைமைச் செயலாளார் இறையன்புவுக்கும் சீனியரான இவரின் பெயர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தலைமைச் செயலாளார் பரிந்துரை பட்டியிலிலும் இடம் பெற்றிருந்தது. 1986-ம் ஆண்டு ஐ ஏ எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் அமர்ந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் வர்மா தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவராக இருக்கிறார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துறைகளின் முதன்மைச் செயலாளராக இருந்து பல திட்டங்களை வகுத்து கொடுத்திருக்கிறார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஹன்ஸ்ராஜ் வர்மா, அதிமுக ஆட்சிக்காலத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் தகவல் வெளியானது. சீனியர் என்ற அடிப்படையிலும் நேர்மையான அதிகாரி என்ற அடிப்படையிலும் தலைமைச் செயலாளர் போட்டியில் இவரின் பெயரும் அடிபடுகிறது.

இவர்கள் இருவரை தவிர்த்து அடுத்ததாக கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் விக்ரம் கபூர், அதுல்ய மிஸ்ரா. கிருஷ்ணன், சந்தீப் சக்சேனா உள்ளிட்ட பலரும் தலைமைச் செயலாளார் போட்டியில் இருக்கிறார்கள். இருப்பினும் ராஜஸ்தானைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா, ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகிய இருவரில் ஒருவரைத்தான் தமிழ்நாடு அரசு அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப் போகிறது என்பது மட்டும் உறுதியாக சொல்கின்றனர் அரசு உயர் அதிகாரிகள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.