மதராசப்பட்டினம் – இந்த பெயரை கேட்டாலே ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் நம் அனைவரின் எண்ணத்திலும் தோன்றும். மதராசபட்டினம், மதராஸாகி, சென்னையாக மாறிய தினம் இன்று.
நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரு நகரத்தை அதன் புறவடிவம், சமூகச் சூழல், பண்பாட்டு பின்னனியை தத்ரூபமாக திரையில் பதிவு செய்தது தான் அதற்கான காரணம். வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று புகழப்பட்டு வரும் சென்னையின் முதல் பெயர் மதராஸபட்டினம். மதராஸப்பட்டினம், மதராஸாகி பின்னர் சென்னையாக மாறியது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டின் தலைநகரம், தென்னிந்தியாவின் நுழைவாயில், இந்தியாவின் நான்காவது பெரிய நகரம், மிக நீண்ட கடற்கரை, பண்டைய கால வரலாற்று சின்னங்களை உள்ளடக்கிய மாநகரம் என்ற பெருமைகளை கொண்டது சென்னை. எல் ஐ சி கட்டடம், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், புனித ஜார்ஜ் கோட்டை, மெரினா கடற்கரை இவைகள் எல்லாம் சென்னையின் அடையாளங்கள்.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் துறைமுகம். இவை இரண்டு தான் சென்னை என்ற மாநகரம் தோன்றுவதற்கான அடிப்படை புள்ளி. தமிழ்நாட்டை மையமாக கொண்டு சென்னையில் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய அதிகார மையம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. மிக விரைவிலேயே அந்த கோட்டை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உருவாக்கிய தென்னகத் தலைமையிடமாகவும் மாறியது. சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி சென்னையை முதன்மையான வணிக மையம் என்று பெயரெடுக்க காரணமாக அமைந்தது.
1639 – ஆகஸ்ட் மாதம் 22 ஆம் நாள் மதராஸப்பட்டினம் உதயமானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டி முடித்த பிறகு அதையொட்டிய கிராமங்கள் அனைத்தும் வியாபார நிமித்தமாக ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட போதிலிருந்து மதராஸபட்டினத்தின் தோற்றம் உருவாக தொடங்கியது. இப்படி படிப்படியாக வளர்ந்த மதராஸப்பட்டிணம் 1688 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. கிழக்கிந்திய ராணுவத் தளபதிகள் படை நடவடிக்கைகளுக்கான மதராஸப்பட்டினத்தை பயன்படுத்த தொடங்கினர். பின்னர் பிரிட்டானிய குடியிருப்பு எல்லைக்கு உட்பட்ட நான்கு மகாணங்களில் ஒன்று என்ற பெருமையும் மதராஸபட்டினத்திற்கு கிடைத்தது. பின்னர் மதராஸப் பட்டினம் என்பது பிறமொழி பேசுவோருக்கு ஏதுவாக மெட்ராஸ் என அழைக்கப்பட்டது
மதராஸப்பட்டினம், மதராஸ், மெட்ராஸ் என பல பெயர்கள் உருவான நிலையில் ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்தது. 1996 ஜூன் 17. அப்போதய முதல்வர் மு.கருணாநிதி சென்னை என்ற ஒரே அதிகாரப்பூர்வ பெயராக மாற்றம் செய்து அறிவித்தார். இருப்பினும் இன்றளவும் மெட்ராஸ் ஐ ஐ டி, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பேச்சுவழக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. சிறு, சிறு கிராமங்களாக இருந்த பல கிராமங்கள், கால மாற்றங்களால் ஓங்கி உயர்ந்த கட்டடங்களால் பெரு மாநகரமாகி சென்னையாக வானளவு உயர்ந்து நிற்கிறது.







