மத்திய பிரதேசம் | போலி மருத்துவரால் பறிபோன 7 உயிர்கள்… நடந்தது என்ன?

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைகள் செய்து ஒரே மாதத்தில் 7 பேரை கொலை செய்த போலி மருத்துவர் சிக்கினார்.

த்திய பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஜான் கெம் என்ற இதயநோய் நிபுணர் பணி செய்து வந்தார். இதய நோயாளிகள் பலருக்கு இவர் அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். ஒரே மாதத்தில் இவரிடம் அறுவை சிகிச்சை செய்த 7 பேர் இறந்தது இவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது.

 

அதில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மிக பிரபலமான இதய நோய் நிபுணர் ஜான் கெம். இவர் தற்போது பிரிட்டனில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்ற நபர் தன்னுடைய அடையாளங்கள் அனைத்தையும் மறைத்து, ‘தான் தான் பிரிட்டனின் பிரபலமான இதய நோய் நிபுணர் ஜான் கெம்’ என ஆள் மாறாட்டம் செய்ததோடு, அதற்கேற்ப போலி ஆவணங்களையும் கொடுத்து மருத்துவராக பணியில் சேர்ந்திருக்கிறார்.

7 பேர் உயிரிழந்ததை யொட்டி, டாமோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் தீபக் திவாரி புகார் அளித்ததன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மருத்துவமனையின் அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தது. ஹைதராபாத்திலும் விக்ரமாதித்தியா யாதவ் மீது மோசடி வழக்கு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட புலனாய்வுக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.