குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கிராமப்புற வளர்ச்சியில் ஆர்வமிக்கவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியோடு முடிவடைய உள்ளது. வரும் 11ம் தேதி புதிய குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், ஓய்வு பெற உள்ள வெங்கைய்யா நாயுடுவுக்கு பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெங்கைய்யா நாயுடு உடனான தனது நீண்ட கால நட்பு குறித்துப் பேசினார்.
அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வெங்கைய்யா நாயுடுவும் தானும் நிறைய கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, கிராமப்புற வளர்ச்சித் துறையில் பணியாற்றுவதை விரும்பக்கூடியவர் அவர் என குறிப்பிட்டார். இதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளதாகவும் இதை அவரே பலமுறை குறிப்பிட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மாநிலங்களவையை மிகுந்த திறனுடன் இயங்கவைத்த அவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு என பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, அவையில் வெளிப்படையாக நடக்கக்கூடியவற்றை மட்டுமின்றி, மறைவாக நடப்பதையும் அறிந்து கொள்பவர் அவர் என தெரிவித்தார். அனுபவம் மிகுந்தவர் என்பதால், எதிர்க்கட்சிகளின் கவலைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவராக வெங்கைய்யா நாயுடு இருந்தார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
செயல் எதுவும் இன்றி அமைதியாக அமர்ந்திருப்பது வெங்கைய்யா நாயுடுவுக்கு இயலாத ஒன்று என தெரிவித்த பிரதமர், கொரோனா ஊரடங்கு காலம் அவருக்கு மிகப் பெரிய தண்டனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.
அப்போதும்கூட யாரேனும் தொலைபேசியில் பேசினால் அவரது நலம் குறித்து விசாரிப்பதும், அவருக்கு உதவி தேவையா என கேட்பதுமாக வெங்கைய்யா நாயுடு இருந்தார் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
குடியரசு துணை தலைவராக அறிவிக்கப்பட்டபோது கட்சியில் இருந்து விலக வேண்டும் என்பதால் அவர் மிகுந்த வேதனைப் பட்டார் என தெரிவித்த பிரதமர் மோடி, எனினும், குடியரசு துணைத் தலைவராக அவரது சேவை உத்வேகம் அளிக்கக்கூடியதாகவும், அனைத்து மூத்த உறுப்பினர்களின் பாராட்டைப் பெறக்கூடியதாகவும் இருந்தது என கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, குடியரசு துணைத் தலைவராக வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருந்ததில்லை என குறிப்பிட்டார். ஆனால், கட்சி அப்படி ஒரு முடிவு எடுத்தபோது, கட்சியை விட்டு விலக வேண்டும் என்பதால் கண் கலங்கியதாக அவர் தெரிவித்தார். எனினும் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்தார்.
ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் மற்றொரு பக்கம் மிகுந்த வேதனையை தான் அனுபவித்ததாக வெங்கைய்யா நாயுடு தெரிவித்தார்.











