மாநிலங்களவையில் இன்று விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடைபெற்றபோது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு இரண்டு நிமிடங்களே ஒதுக்கிய மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு, பின்னர் அவரை பாராட்டினார்.
விலைவாசி உயர்வு குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றபோது அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார். வைகோ பேச எழுந்தபோது அவருக்கு இரண்டு நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார். அப்போது ஏமாற்றமும் ஆச்சர்யமும் கலந்த முகபாவனையோடு வெங்கைய்யா நாயுடுவை ஏறெடுத்து பார்த்து ”எனக்கு பேச அதிக நேரம் கொடுத்துள்ளீர்கள் சார்” என வைகோ கூறினார். தனக்கு குறைவான நேரம் ஒதுக்கப்பட்டதை இவ்வாறு நகைச்சுவையாக வைகோ விமர்சிக்க, அதற்கு வெங்கைய்யா நாயுடு ”ஆமாம் அதிக நேரம்தான்” என சிரித்தவாறே கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து பேசிய வைகோ, உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வை புள்ளி விபரங்களோடு எடுத்துரைத்தார். அவைத் தலைவர் இரண்டு நிமிடங்களே தனக்கு ஒதுக்கியுள்ளதால் தாம் பேச வந்த பல விஷயங்களை தவிர்த்துவிட்டு முக்கியமான விஷயத்தை மட்டும் கூறுவதாக தெரிவித்து பேசிய வைகோ, கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு விலைவாசி உயர்வு என்கிற அச்சுறுத்தலை சாமான்ய மக்கள் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல், விலை உயர்வால் ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வு அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைகோ கூறினார். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுவது குறித்தும் வைகோ தனது உரையில் எடுத்துரைத்தார். தனது உரையை சுமார் 3 நிமிடத்திற்குள் முடித்த வைகோ, அவைத் தலைவர் உத்தரவுக்கு கட்டுப்பட்டு குறுகிய நேரத்தில் பேசி முடித்துவிட்டதாகக் கூறினார்.
இதையடுத்து பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு, நாட்டிலேயே மிகவும் ஆக்ரோஷமான பேச்சாளர் வைகோ எனவும் இதனை கூறுவதற்கு தாம் சிறிதும் தயங்கவில்லை என்றும் தெரிவித்தார். அப்படிப்பட்ட ஆக்ரோஷமான பேச்சாளருக்கே இரண்டு நிமிடங்கள்தான் தம்மால் ஒதுக்க முடிந்தது எனக் கூறிய வெங்கைய்யா நாயுடு, எல்லோரும் பேச வாய்ப்பு அளிக்கும் வகையில் அவையை தான் நடத்த வேண்டிய சூழல் இருப்பதை உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.








