முன்னாள் மதுரை வடக்கு மண்டல தலைவர் இசக்கி முத்துவின் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
சென்னையிருந்து மதுரை வந்த அழகிரிக்கு அரசியல் ஆசான் மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் என்றால், அன்றிலிருந்து இன்றுவரை வலதுகரமாக இருப்பவர் இசக்கி முத்து, முக்கிய முடிவுகள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் இசக்கிமுத்துதான் தயார் செய்வார். மேலும் மதுரை மாவட்ட திமுக அவைத் தலைவர் மற்றும் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பு வகித்தவர்.
சில காரணங்களுக்காக மதுரை திமுக அவைத்தலைவர் இருந்த இசக்கி முத்து உள்ளிட்ட 11 பேர் கட்சிலிருந்து நீக்கப்பட்டார். அன்றைய முரசொலியில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் நீக்கப்பட்டவர்களுடன் கட்சியினர் எந்த வித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தலைமைக்கு இசக்கி முத்துவின் மனைவி அன்னபூரணி கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில் ‘தலைவரே, நான் கழக மகளிரணியில் உள்ளேன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இசக்கி முத்து எனது கணவர்தான். அவருடன் நான் தொடர்பு வைத்து கொள்ளலாமா? நீங்கள் கூறும் பதிலை வைத்துதான் நான் முடிவெடுக்க வேண்டும்’ என்று எழுதியிருந்தார். இதை பார்த்த கருணாநிதி சிரித்து விட்டாராம். தனக்கென கரகர குரலில் ’குடும்பத்தை பிரிக்காதீங்கய்யா’ என கருணாநிதி கூற, மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் கட்சி பணியாற்ற உத்தரவிட்டதாம் கட்சி.
தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு கொடிக்குளத்தில் வசித்து வரும் இசக்கி முத்துவை நேரில் சென்று நலம் விசாரித்தார் மு.க.அழகிரி. பின் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த இசக்கி முத்து, மு.க.அழகிரிருக்கும் எனக்கும் 42 ஆண்டுகள் நட்பு. தென் மாவட்டத்தில் திமுகவை காப்பாற்றியது அழகிரி தான். மதுரையில் நிர்வாகம் மன நிறைவாக இல்லை எனவும் மு.க அழகிரி திமுகவில் இணைத்து பணியாற்றவில்லை என்றால் 2024 வது தேர்தல் திமுகவுக்கு சோதனையான தேர்தலாக அமைந்து விடும் என்றார்.
எழுத்து : மா.நிருபன் சக்கரவர்த்தி







