சமையல் காஸ் சிலிண்டரின் விலை அடுத்த வாரம் உயா்த்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
சமையல் காஸ் சிலிண்டரின் விலை அக்டோபா் 6-ஆம் தேதி கடைசியாக ரூ.15 அதி கரிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை அதன் விலை ரூ.90 அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் காஸ் சிலிண்டர் விலையை குறைவாக விற்பதால் ஏற்படும் இழப்பு, ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாயை எட்டியுள்ளதாகவும் இதனால், அதன் விலையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், விலை எவ்வளவு உயரும் என்பது அரசின் அனுமதியைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது. செலவினத்துக்கு ஏற்ப சில்லறை விற்பனை விலையை அதிகரிக்க, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும், இந்த இடைவெளியைக் குறைக்க அரசு மானியம் எதையும் அங்கீகரிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே இந்த விலை உயா்வு இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.








