சாதாரண மனிதர்கள் தொடங்கி உலகையே புரட்டிப் போட்ட பெரும் தலைவர்கள் வரை காதலும், காதல் கடிதங்களும் தவிர்க்க முடியாத ஒன்று.
காதலர் தினத்தில் இரண்டு உள்ளங்கள் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ள எல்லா காலத்திலும் கடிதங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. சாதரண மனிதர்கள் தொடங்கி உலகையே புரட்டிப் போட்ட பெரும் தலைவர்கள் வரை காதலும், காதல் கடிதங்களும் தவிர்க்க முடியாத ஒன்று. போருக்கு நடுவே காதலால் கசிந்துருகிய “சேகுவேரா” முதல் அதிகாரத்தை சாமானியனுக்கும் கிடைக்க அரசியலமைப்பு எனும் செங்கோல் ஏந்திய அண்ணல் அம்பேத்கர் வரை எழுதிய காதல் கடிதங்களையும் பற்றி விரிவாக பார்க்கலாம்.
போரின் நடுவே “சேகுவேரா”-வின் காதல் :
சேகுவேரா தனது காதல் மனைவி அலெய்டாவுக்கு எழுதிய கடிதத்தில்
“பிரியமானவளே! உன்னைப் பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்திற்காக எப்போதும் தியாகங்கள் செய்ய விரும்புகிற மனிதன் என்று என்னை நீ புரிந்து கொள்வாய். தைரியமாக இரு. ஒருவேளை யுத்தத்தில் நான் இறந்து போனால், எனது குழந்தைகள் பெரியவர்களாகி எனது கடமையை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன்.
இதனையும் படியுங்கள்: வெற்றி பெற்ற மனிதரெல்லாம்… தங்கச்சிலையால் தவித்த சந்திரபாபு…
காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும் எண்ணத்தால் உங்களோடு இருப்பேன். எனது அன்புக்குரிய மனிதர்களை, உன்னை, குழந்தைகளை பிரிய நேர்கிறதே என்று வேதனைப் படுகிறேன். உடல்நலத்தை கவனித்துக் கொள். குழந்தைகளை பார்த்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை மனைவியாக பெற்றதையும் என் வாழ்க்கையின் அற்புத விஷயங்களாக கருதுகிறேன்.
இந்தப் போராட்டத்தில் இறக்க நேருமானால் சாகும் தறுவாயில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.”
நீ இல்லையென்றால் என்னவாகியிருப்பேன்..? – பி.ஆர்.அம்பேத்கர்
அம்பேத்கர் தனது மனைவி ராமாபாய்க்கு எழுதிய கடிதம் :
”நான் நம் வீட்டையும், உங்கள் எல்லாரையும் காணத்துடிக்கிறேன். உன்னை எண்ணி பிரிவுழல்கிறேன். யஷ்வந்தின் நினைவு வாட்டியெடுக்கிறது. என்னை வழியனுப்ப கப்பல் வரை வந்தாய். உன்னை வரவேண்டாம் என நான் சொல்லியும், எனக்குப் பிரியாவிடை கொடுக்க ஓடோடி வந்தாய்.
சுற்றியிருந்த மக்கள் என்னை ஆரவாரத்தோடு வழியனுப்பி வைப்பதை கண்கூடாகப் பார்த்தாய். நீ நன்றியுணர்வால் நிறைக்கப்பட்டவளாக, உணர்ச்சிவயப்பட்டவளாகக் காட்சியளித்தாய். உன்னுடைய உணர்வுகளைச் சொற்களைக்கொண்டு வெளிப்படுத்த இயலாமல் நின்றாய்.
இதனையும் படியுங்கள் :சங்க இலக்கியங்கள் முதல் நவீன காலம் வரை வாழும் காதல்…..
நீ பேச நினைத்ததை எல்லாம் உன் விழிகள் தெரியப்படுத்திவிட்டன. நீ உதிர்க்கும் சொற்களைவிட உன்னுடைய மௌனம் பலவற்றைப் பேசியது. உன் நாவினில் சொற்கள் பூத்தன,எனினும், உன் விழித்துளிகளே அச்சொற்களின் முழுப்பொருளாகும். அந்தக் கண்ணீர்த்துளிகள் வாய்மொழி வெளிப்படுத்த இயலாதவற்றையெல்லாம் பேசின.
ரமா, நீ என் வாழ்க்கையில் இல்லையென்றால் என்னாகி இருக்கும்? நீ என் துணையாக உடன்வராமல் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும்? முற்றிலும் நிலைகுலைந்து, எண்ணிப்பார்க்க கூட முடியாத அளவுக்கு என் கனவுகள் சுக்குநூறாகியிருக்கும்.
ரமா, என் வாழ்வில் நான் தேடுவதையெல்லாம் தொலைத்திருப்பேன். எல்லாமும், என்னுடைய எல்லா உள்ளக்கிடக்கைகளும் நிறைவேறாமல், காயப்பட்டுப் போயிருப்பேன். சிறு பதரைப்போலப் பொருளற்றவனாக இருந்திருப்பேன்.” என எழுதியுள்ளார்.
டால்ஸ்டாய்-சோன்யாவின் காதல் :
ரஷ்ய எழுத்தாளர் தனது காதல் மனைவி சோன்யாவிற்கு எழுதிய கடித்தத்தில்
இந்தக் கடிதத்தை என்னிடமே வைத்துக்கொண்டு, மறு முறையும் எனக்கு பேசத் துணிவில்லை எனில் இதைக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணுகின்றேன். உண்மையாக கூறு நீ எனது மனைவியாக விரும்புகிறாயா? உனது பதில் நெஞ்சின் ஆழத்திலிருந்து வர வேண்டும். தீர்க்கமாக சிந்தித்து விடை கொடு. உன்னை நான் நேசிக்கும் அளவுக்கு நான் கணவன் என்றமுறையில் உன்னால் நேசிக்கப்படா விட்டால், அது மிக வும் கொடியது. “ என எழுதியுள்ளார்.
சுபாஸ் சந்திர போஸின் காதல் கடிதம்:
சுபாஸ் சந்திர போஸ் தனது காதல் மனைவிக்கு எழுதிய கடித்தத்தில்..
“என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?.”
“எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம். அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
நீ இல்லை எனில் நான்… – காரல் மார்க்ஸ் :
காரல் மார்க்ஸ் தனது மனைவி ஜென்னி மார்க்ஸுக்கு எழுதிய கடிதத்தில்
“அன்பு கொண்ட பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மீண்டும் மனிதனாக்குகிறது; ஜென்னி போல் ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன் “ என எழுதியுள்ளார்.
பெரியாரின் காதல் :
“பெண்ணும், ஆணும் சம நிலையில் பழகும் வாய்ப்பு தந்து, ஒருவருடைய குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து, ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்!” என்று உயர்வான காதல் பற்றி தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
– யாழன்












