வெற்றி பெற்ற மனிதரெல்லாம்… தங்கச்சிலையால் தவித்த சந்திரபாபு…

காதலர் தினமான இன்று காதலுக்கு மரியாதை செய்த நடிகர் சந்திரபாபுவை குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. இன்று காதலர் தினம் என உலகெங்கும் கொண்டாடப்படும் நிலையில் எது காதல் எனத் தெரியாமலே பல வகை…

காதலர் தினமான இன்று காதலுக்கு மரியாதை செய்த நடிகர் சந்திரபாபுவை குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.

இன்று காதலர் தினம் என உலகெங்கும் கொண்டாடப்படும் நிலையில் எது காதல் எனத் தெரியாமலே பல வகை காதல்கள் காணப்படுகின்றன. காதல் என்னும் மூன்றெழுத்து மந்திரச்சொல், சங்க இலக்கியங்கள் முதல் நவீனங்கள் வரை கொட்டிக் கிடக்கிறது. காதலை போற்றாத மனமும் இல்லை, கொண்டாடாத கவிஞனும் இல்லை.

காதலுக்கு மரியாதை அளித்த திரைப்படங்களில் கதாநாயகர்கள் நடித்த கதை உண்டு. அவை கற்பனை என்றாலும் சொக்க வைக்கும் காதலில் மயங்கிய பெண், தனது மனைவி எனத் தெரிந்ததும், அவளது காதலனிடம் சேர்த்து வைத்து உண்மைக் காதலுக்கு மரியாதை அளித்தவர் நடிகர் சந்திரபாபு….

“பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை”

எனப்பாடிய சந்திரபாபுவின் வரிகள் அவருக்கே வாழ்க்கையாக அமைந்துவிட்டது.

தூத்துக்குடியில் ரோட்ரிக்ஸ் – ரோசரின் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஜோசப் பிச்சை என்கிற சந்திரபாபு. சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்திய விடுதலைப் போராட்ட வீரரான சந்திரபாபுவின் தந்தையை, அன்றைய ஆங்கிலேய அரசு இலங்கைக்கு நாடு கடத்தியது.

பின்னர் 1943-ஆம் ஆண்டில் இந்தியா திரும்பிய சந்திரபாபுவின் குடும்பம் சென்னையில் குடியேறியது. சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். திரைப்படங்களில், கோட் – சூட் அணிந்து அவர் மிடுக்குடன் வந்து போகும் காட்சிகளுக்கு அதுவே காரணம்.

எம்ஜிஆர், சிவாஜி என முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்த சந்திரபாபு, தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக இடம்பெற்று விட்டார். ஆசையாய் திருமணம் முடித்த பெண், அன்றைய இரவிலேயே தனது காதலனிடம் சேர்த்து வைக்க கோரினால் என்ன செய்வது? அப்படி ஒரு அபாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார் அனைவரையும் சிரிக்க வைத்த சந்திரபாபு.

தான் மணந்த பெண், வேறொருவரை விரும்புவதாகக் கூறியதால், அவரது விருப்பப்படியே காதலருடன் வாழ, அன்று இரவே மரியாதையுடன் அனுப்பி வைத்தார். நடிகர் பாக்யராஜ் நடித்து, இயக்கி வெளியான அந்த 7 நாட்கள் திரைப்படம் சந்திரபாபுவின் உண்மைக் கதையை தழுவியது தான்.

”பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே… தங்கச்சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே”  என்ற வரிகளை பாடி நடித்து மக்களை சிரிக்க வைத்த சந்திரபாபுவுக்கு இவை  பொருந்தியதுதான் மனதை உருக்கிய செய்தி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.