ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு காதல் ஜோடி ஒரே நேரத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் 25. இவர் டிப்ளமோ வரை படித்துவிட்டு பால் வண்டி ஓட்டி வருகிறார். இதே போன்று
ஓமலூர் அருகே உள்ள அடைக்கனூர் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரது மகள்
பிரதிக்க்ஷா (20) பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கண்ணன் பிரதிக்ஷா வீட்டிற்கு பால் எடுத்து வர செல்லும் பொழுது
இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இருவரும் கடந்த இரண்டு
ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர்
எதிர்ப்பு தெரிவித்தால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பெருமாள் கோவிலில்
திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் காவல்
நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அதே நேரத்தில், ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி ஊராட்சி கோனம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் 27 இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் பொழுது சேலம் அரியானூர் பகுதியை சேர்ந்த திவ்யா 20 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் தெரிய வந்ததும் திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஓமலூர் அனைத்து
மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இரண்டு காதல் ஜோடிகள் ஒரே நேரத்தில்
தஞ்சம் அடைந்ததால் நான்கு வீட்டார் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அங்கு
குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இரண்டு காதல் ஜோடிகளின் பெற்றோர்களை
அழைத்து சமரசம் செய்து இரண்டு காதல் ஜோடியையும் அனுப்பி வைத்தனர்.







