மதுரை வாடிப்பட்டியில் மாவட்டத்தில் முதன்முறையாக ஒலிப் பெருக்கி உரிமையாளர்களிடையே நடைபெற்ற இசைப்போட்டியில், தேனி மாவட்டம் முதலிடம் பெற்றது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி ஒளி மற்றும் ஒலி பெருக்கி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டத்தில் முதன்முறையாக இரண்டு நாட்கள் இசைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 75க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி உரிமையாளர்கள் கருவிகளுடன் பங்குபெற்றனர்.
ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இடத்தில் தாங்கள் கொண்டு வந்த கூம்புவடிவ குழாயினை பொறுத்தி அதில் பாடல்களை இசைக்க வைத்தனர். அவ்வாறு இசைக்கும் போது யாருடைய ஒலிபெருக்கி இரைச்சல் இல்லாமல் தெளிவாக கேட்கிறதோ அந்த ஒலிபெருக்கிக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த நூதன போட்டியினை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து ரசித்தனர்.
இப்போட்டியில் முதல் பரிசினை தேனி மாவட்டம் நியூ நண்பன் ரேடியோஸ் உரிமையாளரும், இரண்டாம் பரிசினை அதே மாவட்டத்தைச் சேர்ந்த உப்புக்கோட்டை இசைவல்லரசு ரேடியோஸ் உரிமையாளரும், மூன்றாம் பரிசினை மதுரை மாவட்டம் பாறைப்பட்டி கே.பி.எஸ் ரேடியோஸ் உரிமையாளரும், நான்காம் பரிசினை திண்டுக்கல் மாவட்டம் நடுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா ரேடியோஸ் உரிமையாளாரும், ஐந்தாம் பரிசினை தருமாபுரி திருமுருகன் ரேடியோஸ் உரிமையாளரும் பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.







