ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருக்கும் நிலையில், அவர் எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் அவரை கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின்…

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருக்கும் நிலையில், அவர் எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் அவரை கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இதனிடையே தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது.

 

மேலும் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதுடன், அவருக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அவர் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதினார்.

இந்நிலையில் தேடப்படும் குற்றவாளியாக பிரஜ்வால் ரேவண்ணா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெங்களூருவில் தான் இல்லாததால் தனது வழக்கறிஞர் வாயிலாக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், விரைவில் உண்மை வெல்லும் எனவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.