ரஜினியின் 171வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இந்த படம் உலகளவில் ரூ.675 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையில் ‘தலைவர் 170’ படத்தை த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஷ்கரண் தயாரிக்கவுள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
https://twitter.com/sunpictures/status/1701105843025137758?t=LwOTLoSD2wzd_cWkevZ0Ag&s=19
இந்நிலையில் தற்போது ரஜினியின் 171வது படத்திற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினிகாந்த் நடிக்கும் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் எனவும், இந்த படத்தையும் ஜெயிலர் படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், சண்டைக்காட்சிகளை விக்ரம் படத்தில் பணியாற்றிய அன்பறிவு அமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ரஜினியின் பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் படங்களை தொடர்ந்து தற்போது “தலைவர் 171” படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.







