லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் தான் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் என உயிரிழந்த சிறைக் காவலர் ராஜாவின் மனைவி விஜயா தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை ஊராட்சியில் வசிப்பவர் மணி இவரது
மகன்கள் நிர்மல் , ராஜா. இதில் ராஜா லால்குடி கிளை சிறையில் சிறை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தம்பி நிர்மலுக்கும் இடையே சொத்து பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த சொத்து பிரச்சனை தொடர்பாக அண்மையில் இருவருக்குள்ளும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மீண்டும் ராஜாவுக்கும் நிர்மலுக்கு இடையே தகராறு
ஏற்படவே தகராறு தொடர்பாக ராஜா லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க
வந்தார். புகாரை லால்குடி போலீசார் ஏற்க மறுத்ததால் விரக்தி அடைந்த சிறை காவலர் ராஜா காவல் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு
தனக்குதானே உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
இதில் ராஜா 84 சதவீதம் தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து
ராஜாவை லால்குடி போலீசார் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி
பெற்று மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம்
அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த சிறைக் காவலர் ராஜாவின் மனைவி விஜயா நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், எனது கணவரின் தம்பி மகள் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு முறையாக விசாரணை செய்யாமல் எங்கள் வீட்டுக்காரரைக் காவல் நிலையத்தில் மிகவும் அசிங்கப்படுத்தி அரை நிர்வாணமாக அமர வைத்ததோடு, காவலர்
ஷு காலால் உதைத்தனர். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான எனது கணவர் தீக்குளித்தார்’ என ராஜாவின் மனைவி விஜயா தெரிவித்தார்.







