ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது மக்கள் நீதி மய்யம்.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையடுத்து, விருப்ப மனு வாங்குவது உள்பட தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்தன.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது, 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன், களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலுச்சேர்க்க நானும் உங்கள் பகுதிக்கு வருகை தரவிருக்கிறேன்.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்த மாவட்டத் தலைமை அலுவலகம் மற்றும் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நேரடியாக விருப்ப மனுப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன். அதனைத் தொடர்ந்து வந்த மக்களவைத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். எனினும், 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை மக்கள் நீதி மய்யம் புறக்கணித்தது. 2021 சட்டமன்றத் தேர்தலை சமக மற்றும் ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது.







