முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

யார் இந்த எல்.முருகன்?

பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் மத்திய அமைச்சராகி கவனம் ஈர்த்திருக்கிறார் எல்.முருகன்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, மக்கள் மத்தியில் எழுந்த ஒரே கேள்வி, தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது தான். அந்த கேள்விக்கு விடையாக, மக்களின் புருவங்களை உயர்த்தும் வகையில், எல்.முருகன் மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டது அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

கடந்தாண்டு மார்ச் மாதம், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவால் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட நிலையில், தலைவராக பொறுப்பேற்ற நாள்முதலே, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினார்.

நாடு முழுவதும் பாஜகவை வலுப்படுத்த அத்வானி கையில் எடுத்த ரத யாத்திரை போன்று, தமிழ்நாட்டில் வேல்யாத்திரையை நடத்தியது, எல்.முருகன் யார் என்பதை தமிழ்நாடு மக்களுக்கு எடுத்துக் காட்டியதுடன், கட்சியின் மேல்மட்ட தலைவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோனூரைச் சேர்ந்த எல்.முருகன் அரசியலில் ஒவ்வொரு அடியாக முன்னேற ஆரம்பித்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று சட்டப்பேரவையை அலங்கரிப்பார்கள் என அப்போதே எல்.முருகன் சூளுரைத்தார். அதேபோன்று, அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், தாராபுரம் தொகுதியில் களமிறங்கினார்.

இதனால், நட்சத்திர தொகுதியாக மாறிய தாராபுரத்தில், பிரதமர் மோடி தொடங்கி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலரும் பரப்புரை மேற்கொண்டனர். எல்.முருகன் மீது மேலிட தலைவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக அமைந்தது.

தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் வெற்றிவாய்ப்பை நழுவ விட்டாலும், அவர் கூறியது போலவே, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையை பாஜக உறுப்பினர்கள் அலங்கரித்தனர். பாஜக உறுப்பினர்களை சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்ததால் அப்போதே, எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, தற்போது அமைச்சரவை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் எல்.முருகன். எல்.முருகன் அமைச்சரவை இடம் பிடித்ததை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடிப்படையில், சட்டக்கல்வி முடித்து, வழக்கறிஞரான எல்.முருகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டு காலம் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தது இவரை நாடறிய செய்தது. தற்போது, மத்திய அமைச்சராகும் எல்.முருகன், தமிழக மக்களின் பிரச்னைகளை தலைநகருக்கு கொண்டு, நிச்சயமாக தீர்வு காண்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

Saravana Kumar

தமிழகத்தில் ரூ.52,257 கோடியில் 34 புதிய திட்டங்களுக்கான முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்!

Niruban Chakkaaravarthi

விஜய் சேதுபதி நடிக்கும் முதல் இந்தி திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Halley karthi