மகாராஷ்டிராவில் லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து உடலை 20 துண்டுகளாக வெட்டியதாக 56 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி ஷ்ரத்தா கொலை சம்பவத்தை போலவே மகாராஷ்டிராவிலும் கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. மும்பை மிரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனோஜ் சானே என்பவர் வசித்து வருகிறார். இவருடன் லிவ் இன் பார்ட்னராக 32 வயது பெண் ஒருவரும் வசித்து வந்துள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண்ணை மனோஜ் சானே கொலை செய்து, மரம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கட்டர் கருவியை கொண்டு, பெண்ணின் உடலை 20 துண்டுகளாக வெட்டியதாக கூறப்படுகிறது. மனோஜ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரிடம் விசாரித்தனர்.
இதனால் பதற்றம் அடைந்த மனோஜ் சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து கருப்பு பையுடன் வீட்டை விட்டு வெளியேறி இரவு தான் வீடு திரும்பினார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வீட்டின் கதவை உடைத்து போலீசார் சென்று பார்த்துள்ளனர்.
அங்கு, உடலின் சில பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேக வைக்க முயற்சிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்த போலீசார், மூன்று வாளிகள் நிறைய உடல் பாகங்களை கண்டறிந்து கைப்பற்றினர். விசாரணையில் 3 தினங்களுக்கு முன்பு கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்தது. கொலை செய்து பெண்ணின் உடலை மறைக்க முயன்ற மனோஜை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







