மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக போராடி வந்த 2 வயது பெண்குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முகவலி கிராமத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, தனது வீட்டின் அருகே நேற்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அருகே இருந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை தொடங்கினர். குழந்தையை மீட்கும் வகையில் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் ஜே.சி.பி. இயந்திரங்கள் உதவியுடன் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் 40 அடியில் சிக்கிக்கொண்டிருந்த குழந்தை, இயந்திரங்களின் அதிர்வால் 100 அடி ஆழத்திற்கு சென்று சிக்கிகொண்டது.
இதனால் குழந்தையை மீட்கும் பணி கடும் சவாலாக இருந்த நிலையில், இரவு பகல் பாராமல் தொடர்ந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் 55 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை மீட்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்தபோது குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. போர்வெல் கிணற்றின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.







