தமிழறிஞராக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இலக்கிய ஆளுமை மறைந்த நெல்லை கண்ணன் குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.
மடை திறந்த பேச்சு, தங்கு தடையில்லா எளிய தமிழ் நடை, நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கும் கருத்தாழம் மிகுந்த பேச்சால் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் அரசியல், இலக்கியம் மற்றும் சமய சொற்பொழிவு எனக் கலந்து கொண்ட மேடைகளில், நெல்லை தமிழால், பார்வையாளர்களை, கட்டிப்போடும் வல்லமை கொண்ட தமிழறிஞராக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இலக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர் மறைந்த நெல்லை கண்ணன்.
பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பத்தில்,1946-ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர் ந.சு.சுப்பையா பிள்ளை-இலக்குமி அம்மையார். விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த காலத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக வலம் வந்த நெல்லை கண்ணன், மறுபுறம் கவியரசு கண்ணதாசன் உட்பட இலக்கிய ஆளுமைகளோடும் , பாரதியாருடன் சமகாலத்தில் வாழ்ந்த இலக்கியவாதிகளுடனும் நெருங்கிப் பழகியவர்.
காங்கிரஸ் காரராக இருந்தாலும், திராவிட இயக்க தலைவர்களான பெரியார், அண்ணாவின் சாதனைகளைப் பெருமிதத்துடன் சொல்லும் மாண்பாளர். காமராஜர் ஆட்சி, பொதுவுடைமை இயக்க தலைவர் ஜீவா, கக்கன் ஆகிய தலைவர்களின் சாதனைகளையும், நேர்மையையும், எளிமையையும், மேடை தோறும் தவறாமல் பேசி வந்தார். தீவிர காங்கிரஸ்காரராக இருந்தாலும், அனைத்து கட்சி நிர்வாகிகளையும், பொது வெளியில் உறவு முறை சொல்லி அன்போடு அழைப்பார்.
அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும் போது, நாகரீகமான முறையில் நையாண்டி செய்தவர். பட்டிமன்ற பேச்சாளராகவும், நடுவராகவும் வலம் வந்தவர். சைவ வழி குடும்பத்தைச் சார்ந்த நெல்லை கண்ணன் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம்,கம்ப ராமாயணம், பாரதியார் கவிதைகளில் ஆழ்ந்த புலமை கொண்டவராகவும், திகழ்ந்தார். அரசு தொலைக்காட்சிகளிலும், தனியார் தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்ற நடுவராகப் பலமுறை செயல்பட்டு, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியிலும் நடுவராகக் கலந்து கொண்டார்.
இரு முறை திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கட்சி வெற்றி பெறும் போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. கட்சி தோல்வியுறும் போது தலைமையே அழைத்து, போட்டியிடுங்கள் என வலிய வந்து வாய்ப்பு வழங்குகிறதே என நகைச்சுவையாகப் பேசுவார். தமிழ்நாடு காங்கிரசில் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளை வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்காகத் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டவர். பழ.நெடுமாறன், ஜி.கே.மூப்பனார் என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமான நட்பு கொண்டவர். 2006-ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தேர்தலுக்குப் பின் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
திராவிட இயக்க மேடைகளுக்கு நிகராக, காங்கிரஸ் இயக்க மேடைகளில் இலக்கிய ஆளுமையோடு முழங்கியவர் நெல்லைக்கண்ணன். நினைவாற்றல் மிக்கவர். தமிழ் வழி வழிபாட்டையும், அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக இருந்ததையும், சங்க இலக்கியம், பக்தி இலக்கிய வரலாற்று ஆதாரங்களுடன் உரையாற்றுபவர். சமீப ஆண்டுகளாகத் தமிழர்களிடையே ஒற்றுமை வேண்டும் என கருத்தியல் ரீதியாக மேடைகளில் உரையாற்றி வந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெருந்தலைவர் காமராஜர் விருதையும், தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதையும் பெற்றுள்ளார்.











