தஞ்சை என்றால் நெல் விளையும் பூமி, டெல்டா பகுதி என்று மட்டும்தான் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால், சென்னை மெரினாவைப் போல மக்கள் அதிகம் கூடும் கடற்கரையும் அங்கு இருக்கிறது என்றால் ஆச்சரியப்படுவீர்கள் அல்லவா? ஆம். சென்னை மெரினாவைப் போல குட்டி மெரினாவாக காட்சியளிக்கிறது தஞ்சை மாவட்டத்திலுள்ள டெல்டா கடற்கரை.
1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி இப்பகுதியில் ஒரு நினைவுச் சின்னத்தை நிறுவினார். அந்த நினைவுச் சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர். மனோராவிற்கு அருகில் புதுப்பட்டினத்தில்தான் உள்ளது இக்கடற்கரை. பட்டுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள இக்கடற்கரைக்கு மக்கள் வைத்துள்ள பெயர் டெல்டா கடற்கரை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிலர் மட்டுமே வந்து செல்லும் கடற்கரையாக இப்பகுதி இருந்து வந்தது. நாட்கள் செல்ல, செல்ல அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துவிட்டனர். தற்போது சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துவிட்டனர். கடற்கரையில் அமர்ந்து உரையாடிவிட்டு, கடலோரத்தில் குட்டிக் குளியலும் போடுகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையைப் போல இங்கு கார்கள், இரு சக்கர வாகனங்கள் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்துவிட்டன. என்னதான் சுற்றுலாத் தளம் என்றாலும் மற்ற கடற்கரைகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளோ இப்பகுதியில் இல்லை. சில கடைகள் மட்டுமே உள்ளன, கடற்கரை சுத்தப்படுத்தப்படாமல் குப்பைகளுடன் காட்சியளிக்கிறது. அத்துடன், முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மக்கள் ஆபத்தை உணராமல் குளிக்கும் நிலை உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மாறி வரும் டெல்டா கடற்கரை மீது தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி பூங்கா, சாலை, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அப்படி வசதிகள் செய்யப்பட்டால் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவர், கடைகள் அமைத்தால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைக்கின்றனர். தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் பார்வை தங்கள் மீது விழுமா என காத்திருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.







