மதுபான முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ தலைமை அலுவலகத்தில், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று ஆஜரானார்.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன் டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியா மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பு காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தனது வீட்டில் இருந்து திறந்த காரில் தொண்டர்கள் புடைசூழ சென்றார்.
முதலில், ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்திற்கு சென்ற அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற அவர் ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, சிபிஐ அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றபோது தொண்டர்கள் அலுவலக நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், டெல்லி துணை முதலமைச்சர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தொண்டர்களை போலீசார் குண்டக்கட்டாக கைது செய்தனர். இதனால், சிபிஐ அலுவலக பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
முன்னதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தம் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் சிபிஐ ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதை தடுப்பதே மத்திய அரசின் நோக்கம் என சாடியுள்ள அவர், குஜராத்தில் நல்ல பள்ளிகள் கட்டப்படுவதை அவர்கள் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், தாம் சிறை செல்வதன் மூலம் குஜராத்தில் தேர்தல் பரப்புரையை யாராலும் நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.







