புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் தாம்பூல பையில் மதுபாட்டில் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உற்றார் – உறவினர்களுக்கு திருமணம் முடிந்தவுடன் உணவு அருந்திவிட்டு செல்லும் போது தாம்பூலம் கொடுப்பது தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது. பொதுவாக தாம்பூலப் பைகளில் தேங்காய், பழங்கள், இனிப்புகள் போன்றவற்றையே போட்டு கொடுப்பார்கள். ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக புதுச்சேரியில் நடைபெற்ற நிர்மல் – ஆர்த்தி என்ற மணமக்களின் திருமண வரவேற்பில் தாம்பூலப் பையில் வெற்றிலைப் பாக்கு,தேங்காய் ஆகியவற்றுடன் மதுபாட்டிலும் சேர்த்து வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருமண வரவேற்புக்கு வந்த பலர் மதுபாட்டில் வைத்து வழங்கப்பட்ட தாம்பூல பைகளை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். இதனிடையே திருமணம் போன்ற சுப மங்கல நிகழ்ச்சிகளில் பண்பாட்டுக்கு மாறாக தாம்பூலப் பைகளில் மதுபாட்டில் வைத்து கொடுப்பது ஏற்கத்தக்கதல்ல என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








