இயக்குநர் லிங்குசாமியின் #RAP019 படப்பிடிப்புத் தளத்தில் பாரதிராஜாவின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இயக்குநர் லிங்குசாமி, கடைசியாக விஷால் நடித்த ’சண்டக்கோழி 2’ படத்தை இயக்கி இருந்தார். இதையடுத்து தனது அடுத்தப் படத்துக்கான கதையை சில ஹீரோக்களிடம் கூறி வந்தார். அவரும் நடிகர் ராகவா லாரன்ஸும் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. பிறகு அந்தப் படம் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்குகிறார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம், கடைசியாக தமிழில் ஹிட்டான ’தடம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார்.
லிங்குசாமி, ராம் இணையும் படத்தை, ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில், கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆதி, நதியா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.
தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த படப்பிடிப்பு தளத்துக்கு இயக்குநர் ஷங்கர் சில நாட்களுக்கு முன் சென்றிருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு இன்று சென்று பார்வையிட்டார். பாரதிராஜாவின் பிறந்த நாள் என்பதால், படக்குழுவினர் கேக் வெட்டி, படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினர். பின்னர், படம் உருவாகும் விதத்தைப் பார்த்த அவர், இயக்குனர் லிங்குசாமியையும் படக்குழுவையும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.








