சினிமா பயணத்தில் எதிர்நீச்சல் அடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சினிமா திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர். கேரள மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2003ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். 2005ம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்தார். அதன்பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை 2010க்கு முன்பு, பின்பு என இரண்டாக பிரிக்கலாம். 2012-இல் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நயன்தாரா தொடர்ச்சியான வெற்றிப் படங்களைத் தந்து லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தைப் பெற்றார். பரந்த சினிமா கடலில் பயணித்த நயன்தரா, ஒரு கட்டத்தில் பெரும் அலைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் அந்த அலைகளை வெல்வதற்கான சூத்திரத்தை அறிந்து கொண்ட நயன்தாரா சினிமா கடலில் எதிர்நீச்சல் அடித்து முன்னேறினார்.
முன்னணி நாயகர்களோடு மட்டும் நடிக்காமல் தனக்கென தனி இடத்தையும் உருவாக்கி மற்ற நடிகைகளுக்கும் வழிகாட்டியாக நயன்தாரா இருந்தார் என்பதை மறுக்க முடியாது. டோரா, அறம், மாயா, கோலமாவு கோகிலா, ஓ2 உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகியாக நடித்து தனது நடிப்பு பயணத்தில் புதிய உச்சத்தைத் தொட்டார். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவிற்கும் இடையே காதல் அரும்பி, கல்யாணத்தில் மலர்ந்தது. கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆனால், திருமணத்திற்கு பிறகு நயன்தாரா எப்படி மீண்டும் நாயகியாக நடிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அதிரடியாக சினிமாவிற்கு திரும்பினார் நயன்தாரா. திருமண வாழ்க்கையை சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி தமக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக நயன்தாரா அறிவித்தார். இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நயன்தாராவின் வாடகைத் தாய் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இது தொடர்பாக அரசு விசாரணை நடத்தி நயன்தாரா வாடகைத் தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை என தெரிவித்தது.
இப்படி எத்தனை சறுக்கல்கள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்துப் போராடும் குணம் படைத்த நயன்தாரா, இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நதி வீழ்ந்தது என சந்தோசப் பட்ட சிலருக்கு நதி, நீர் வீழ்ச்சியாக விழுவது, விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து பாய்வதற்குத்தான் என்று உணர்த்திய நயன்தாரா விரைவில் தனது சினிமா வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார்.
வயதானாலும் என்றும் இளமை குறையாமல் அதே பொலிவுடனும், நடிப்புடனும் தனது பயணத்தைத் தொடரும் நயன்தாராவின் வாழ்க்கைச் சரித்திரம், பெண்களுக்கு வாழ்க்கையில் போராடி வெற்றி பெறும் எண்ணத்தை உருவாக்குகிறது என்றால் அது மிகையாகாது.







