சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விதித்த சென்னை போக்சோ நீதிமன்றம்.
சென்னையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், இன்ஸ்பெக்டர், பத்திரிகையாளர், உள்ளிட்ட 13 பேருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர்கள், உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வண்ணாரப்பேட்டை காவல் நிலைய வழக்கில் 22 பேர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், இரு பெண்கள் உள்பட மற்ற 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், மாரீஸ்வரன் என்பவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில் 21 பேருக்கு எதிரான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 8 உறவினர்கள், அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி, காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், தனியார் தொலைக்காட்சி ஊழியர் வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண், எஸ்.பி.ஆர்.கண்ணன் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என நீதிபதி எம். ராஜலட்சுமி செப்டம்பர் 15 ம் தேதி அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று நீதிபதி அறிவித்தார். அதில், சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
மீதமுள்ள இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ராஜேந்திரன், சிவில் சப்ளைஸ் அதிகாரி கண்ணன், அனிதா, காமேஷ்வர்ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, ராஜாசுந்தர் நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தண்டனை விபரங்களை அறிவித்தார்.
ஆய்வாளருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், 50 ஆயிரம் ரூபாயும் உள்பட 21 குற்றவாளிகளுக்கும் சேர்த்து 7 லட்சத்து ஓராயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அந்த தொகையைப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதுதவிர பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியத்திலிருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.








