திமுக மாவட்டச்செயலாளர் பொறுப்பிற்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிர்வாகிகளின் மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது.
திமுகவின் மாவட்டச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது. 72 மாவட்டங்களின் மாவட்ட அவைத்தலைவர், செயலாளர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்புமனுக்கள் தாக்கலாகியுள்ளது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகின்றது. தகுதியுள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, போட்டியுள்ள மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் சுமூகமான முறையில் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு பொறுப்பிற்கு ஒருவருக்கு மேல் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும் என்பதன் காரணமாக, தேர்தலை தவிர்க்கும் வகையில் தென்காசி வடக்கு, தஞ்சாவூர் கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு உள்ளிட்ட மாவட்டங்களில் மனுத் தாக்கல் செய்த நிர்வாகிகளுடன் திமுக முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, துணை அமைப்புச்செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.








