முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

நவீன இந்தியாவின் ‘பொருளாதார சிற்பி’ மன்மோகன் சிங்


ரா.தங்கபாண்டியன்

இந்த நூற்றாண்டில் இந்திய வரலாற்றில் மட்டுமல்ல , உலகப்பொருளாதார வரலாற்றிலும் தன் அளப்பரிய சாதனைகளால் அரிய வரிசையை அலங்கரித்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். நேர்மையானவர். கறைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் என அழைக்கப்படுபவர்.

2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று சோனியா காந்தி பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமராக்கப்பட்டவர் மன்மோகன் சிங். 2004 ஆம் ஆண்டு மே 22ம் தேதி, நாட்டின் 13வது பிரதமராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். எத்தனை நாள் அந்த பதவியில் நீடிப்பார் என கேள்விகள் எழுந்தபோது, தமது அமைதியை மட்டுமே பதிலாக தந்து, தொடர்ந்து 10 ஆண்டுகள் அந்த பதவியை அலங்கரித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரிக்கப்படாத பஞ்சாப் மாநிலத்தில் இன்று பாகிஸ்தானில் உள்ள கா என்ற கிராமத்தில் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி , குர்முக் சிங் -அம்ரித் கவுர் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. பஞ்சாப் பல்கலைகழகத்தில் பொருளாதார படிப்பையும், ஆராய்ச்சி மேற்படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.

கேம்பிரிட்ஜில் பயின்ற போது, நவீன பொருளாதார கோட்பாட்டின் தந்தை என அழைக்கப்பட்ட ஆடம் ஸ்மித் நினைவுப் பரிசையும், ஆராய்ச்சி மாணவருக்கான நிதி உதவியையும் 24 வயதில் வென்று உலக சாதனை படைத்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியை தொடங்கிய மன்மோகன், பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் – பொருளாதார பள்ளியிலும் பேராசிரியராக பணியாற்றினார். 1966 – 69 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றினார். மன்மோகன் சிங்கு 1958 ஆம் ஆண்டு குர் சரண் கவுரை மணந்தார். இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்திய அரசில் , தொழில் வர்த்தக துறையின் முதன்மை ஆலோசகர் , நிதித்துறை செயலர் பொறுப்புக்கு பின், பிரணாப் முகர்ஜி முதல் முறை நிதியமைச்சராக இருந்த போது, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் மன்மோகன் சிங் பணியாற்றியுள்ளார். 1989ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற வி.பி.சிங் , மன்மோகனை , பிரதமரின் பொருளாதார ஆலோசகராக நியமித்தார். பின்னர் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் அமைச்சரவையில், மன்மோகன் சிங் நிதியமைச்சராக பொறுப்பேற்றறார். அப்போது, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, கவலைக்கிடமாக இருந்தது. இரண்டு வாரத்திற்கு மட்டுமே, பெட்ரோலியம் உள்ளிட்ட பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலையை மாற்றியமைத்தார்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற புதிய பொருளாதார மந்திர சொற்களை இந்திய மக்களை உச்சரிக்க வைத்த, மன்மோகன் சிங், அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் முகத்தையே மாற்றியமைத்தார். பன்னாட்டு அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப , இந்தியாவில் இருந்த பழைய லைசன்ஸ் ராஜ் முறைகளை ஒழித்தார்.

1998 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் பணியாற்றினார். மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமே. 1999 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் , தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1991 முதல் 2019 வரை அஸ்ஸாம் மாநிலத்திலிருந்தும், பின்பு 2019 ல் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்தும் மாநிலங்களவை உறுப்பினாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வென்றதால் , மீண்டும் 2 வது முறையாகவும் பிரதமராக பொறுப்பேற்ற அவர், 2014 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி வரை பதவியில் இருந்தார். ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி அடுத்து நீண்ட காலம் பிரதமராக இருந்த பெருமையை பெற்றவர் மன்மோகன் சிங்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம், மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம், கல்விக்கடன், தேசிய சுகாதார இயக்கம், புதிய ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டிக்கள், என புதிய புரட்சியை உருவாக்கினார். மத்திய உயர் கல்வி நிறுவனங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு, 14 வயது வரை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம், ஆதார் அட்டை என முக்கிய திட்டங்களை சட்டமாக்கி செயல்படுத்தினார்.

அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கடும் விமர்சனங்களுக்கு ஆளானர். இலங்கையில் 2009 ல் உள்நாட்டு போரில், இலங்கைக்கு ஆதரவான நிலை, இந்திய – அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தமும் மன்மோகன் சிங் அரசின் சறுக்கல்கள் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து

இந்திரா காந்தி ,மொரர்ஜி தேசாய், சரண் சிங், ராஜிவ் காந்தி, வி.பி. சிங்,சந்திரசேகர், பி வி நரசிம்மராவ் என ஏழு இந்திய பிரதமர்களின் பதவிக்காலத்தில், மத்திய அரசில் முக்கிய பதவிகளை வகித்த பெருமைக்குரியவர். உஸ்பெகிஸ்தான் நாடு மன்மோகன் சிங்கின் தபால் தலையை வெளியிட்டு அவரை கவுரப்படுத்தியது 1987ம் ஆண்டு இந்திய அரசின் பத்ம விபூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

கடந்த கால் நூற்றாண்டுகளாக உலகின் பல நாடுகளில் , பல முறை பொருளாதார வீழ்ச்சிகள் ஏற்பட்டு அந்நாடுகள் பேராபத்தை சந்தித்தன. ஆனால் இந்தியா சில சறுக்கல்களை மட்டுமே சந்தித்து , பொருளாதாரத்தில் வெற்றி நடை போட்டு வருவதற்கு முக்கிய காரணம், நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பியான டாக்டர் மன்மோகன் சிங்கின் ,தொலை நோக்கு பொருளாதார திட்டங்களே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

 – தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காங்கிரஸ் குறித்த கேள்வியைத் தவிர்த்த ஜி.கே வாசன்

Web Editor

கடைசி ஒருநாள் போட்டி; இந்தியாவுக்கு 100 ரன்கள் இலக்கு

G SaravanaKumar

தமிழும் ஆன்மீகமும் ஒன்றுதான் -ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

EZHILARASAN D